பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மீரா கட்டுரைகள் ❖ 10

இப்போதே குஜராத்தில் பி.ஹெச்.டி வரை அவர்களது தாய்மொழியே பயன்படுகிறது.

இந்த வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் அவர்கள் ஆங்கிலம் பயிலும் நம் மாணவர்களை வரவேற்கவா காத்துக்கொண்டிருப்பார்கள்? இறுதியில் நம் மாணவர்கள் எந்த மாநிலத்திற்குத்தான் செல்ல இயலும் என்கிறீர்கள்?

இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில்தான் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக வைத்துக் கொள்வதாக உள்ளது. வேண்டுமானால் நம் மாணவர்கள் அங்கே வேலை தேடிச் செல்லலாம். அந்த மாநிலம் எந்த மாநிலம் என்று கேட்கிறீர்களா? அதுதான் நாகாலாந்து!

நாகாலாந்திற்குச் செல்வதற்கு ஆங்கிலம் மட்டும் போதாது; ஆயுதமும் வேண்டும். அப்படிச் சென்றால்தான் நம் ஆயுள் கெட்டி என்று பொருள்!

தமிழ் பயிற்றுமொழியால் மாணவர்களின் எதிர்காலம் இருளாகிவிட்டது என்று வெளிச்சம் போடுபவர்கள் உள்ளபடியே மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க விரும்பவில்லை; எதிரான காலத்தையே ஏற்படுத்த முனைகிறார்கள். அதனால் மாணவர்களின் நிகழ்காலத்தை அரசை எதிர்க்கின்ற காலமாக்கி அதில் குளிர்காய நினைக்கிறார்கள்.

எதிர்க்கின்றவர்கள் கூற்று எல்லா வகையிலும் உண்மைதானா என்று சிந்திக்க வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளையன் இந்த நாட்டை விட்டு வெளியேறுமுன்பே ஆங்கிலம் எந்தவித ஆரவாரமுமின்றி அகற்றப்பட்டுவிட்டது. அதை அகற்றியதும் அரசுதான். அரசியல்வாதிகள் நடத்துகின்ற அரசுதான். ஆனால் கல்வியாளரின் நல்வாக்கைக் கேட்டுத்தான் அப்பணியை நிறைவேற்றியது.

இந்த முப்பது ஆண்டு காலத்தில் எத்தனையோ ஏழை மாணவர்கள் பள்ளியிறுதி வகுப்பிற்குமேல் படிக்க முடியாமல் தமிழ் மூலம் கற்றபடியே வேலைக்குச் சென்றுள்ளனர்; மாநில அரசுத் துறைகளில் மட்டுமின்றி மத்திய அரசின் அஞ்சல்துறை, புகைவண்டித்துறை முதலியவற்றிலும் நுழைந்துள்ளனர்.

இந்தத் துறைகளில் எல்லாம் குறைந்த அளவு எழுத்தர் வேலைக்குப் பள்ளியிறுதி வகுப்பில் தேறியிருந்தால் போதும்.