பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
மீரா கட்டுரைகள் ❖ 11

மத்திய அரசாங்க அலுவலர் தேர்வுக் கழகம் கூட ஐ. ஏ. எஸ். முதலியவற்றுக்குத்தான் பட்டதாரியாக இருக்கவேண்டும் என்கிறது. ஆனால் எழுத்தர் வேலைக்கு வெறும் பள்ளியிறுதி வகுப்புத்தான் கேட்கிறது. அந்தத் தகுதியுடனேயே இந்தியாவின் பல இடங்களில் பலர் வேலைக்குச் சென்றுள்ளனர்.

நடைமுறைக்கு ஒவ்வாத வாதம்

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் எல்லாரும் எஸ்.எஸ்.எல். சி. படித்தால் போதும் என்பதற்காக அல்ல; தமிழ் பயிற்றுமொழிக் கல்வித் தகுதி பெற்றதாலேயே அவர்கள் பிற மாநிலங்கட்குச் செல்வது தடைப்படுகிறது என்பது எவ்வளவு நடைமுறைக்கொவ்வாத வாதம் என்பதைச் சுட்டிக்காட்டவே. வெளிநாடு செல்லவும், சில உயர் பதவிகள் (ஐ.ஏ.எஸ் முதலியவை) பெறவும் ஆங்கிலம் இன்றியமையாதது என்று அடிக்கடி சுட்டிக் காட்டப்படுகிறது. அதை யாரும் மறுக்கவில்லை. அதற்காகத்தான் ஆங்கிலம் மொழிப் பாடமாகத் தொடர்ந்து இருக்கப் போகிறது. 'சோதிடத்தில் சொல்வார்களே சுக்கிரன் இடம்பெயர்கிறான். சந்திரன் இந்த வீட்டுக்கு வந்தான் - சனி இடம்பெயர்கிறான்' என்றெல்லாம்... அதுபோல ஆங்கிலம் இடம்பெயர்கிறது; அறவே அகற்றப்படவில்லை. இவ்வளவு நாள் ஆங்கிலம் பாடமொழியாக இருந்து வந்தது. இனி அது மொழிப்பாடமாகக் கல்லூரிகளில் இருக்கும். "அகன்றது ஆங்கிலம்... அணைந்தது ஒளி" என்று மருட்டுவோர் பேச்சு உண்மையைத் தலைகீழாய் மறைக்கப் பார்க்கும் புரட்டுப் பேச்சு. "மாணவர்களைப் பலிகொடுத்தா தமிழை வளர்க்க வேண்டும்?" என்று பயங்கரமாக எதையோ கேட்டுவிட்டதுபோல் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள் சிலர். தமிழ்த்தாய் பலி கேட்டு வாழ்ந்து வருபவள் அல்லள். தமிழ், அரசியலாரின் அரவணைப்பையே நம்பியிருந்திருந்தால் மூவேந்தர் ஆட்சி முடிந்த பின்னே முடிந்திருக்க வேண்டுமே!