பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ் இலக்கியம்: வேர்களைத் தேடுவோம் - 1 காலத்திற்கேற்ற வகைகள் - அவ்வக் காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலு ஞாலமுழுமைக்கும் ஒன்றாய் - எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை - பாரதி இன்றைக்கு தமிழ் இலக்கியம் வேரூன்றி விழுது விட்டு நிற்கும் நிலையில், அந்த விருட்சத்தின் வேர்களைத் தேடும் சாக்கில், இன்றைய நமது சிந்தனைகள் எல்லாமே அன்று நம் இலக்கியங்களில் அப்படியே இருந்தன என்று சொல்ல முற்படுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகவே முடியும். அதனால்தான் மகாகவிபாரதி 'எந்த நாளும் நிலைத்திடும் நூல் ஒன்றுமில்லை' என்று சொன்னான். எந்த மகோன்னத இலக்கியமும் ஒரு காலகட்டத்தில் பொருந்தி வராததாய்ப் போய்விடக்கூடும். இருந்தபோதிலும் அந்தப் பழந்தமிழ் இலக்கியத்தின் வீச்சு இன்றைய இலக்கியத்தில் இருக்கலாம் அல்லது இன்றைய இலக்கியத்தின் வேர்களாகப் பழந்தமிழ் இலக்கியம் திகழலாம். அந்த வகையில் அது ஒரு அடிப்படை அல்லது ஒரு அஸ்திவாரம் எனக் கருதப்படுவதில் தவறில்லை. அந்த வேர்களிலேயே வீழ்ந்து கிடக்கும் இன்றைய நிலவரத்தைக் கலாநிதி கைலாசபதி அருமையாகச் சுட்டிக்காட்டுகிறார், இவ்வாறு: