பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 65 குயில்பாட்டில் வருகிறபடி கவியும் குயிலும் பேசுவது, இணைவது சாத்தியமற்றது தான் அப்படியிருந்தும் கண்டதும் காதல் உதயமாகிறது. காதல் உயிரியற்கையல்லவா? கவியாகிய மனிதனும் குயிலும் காதலிப்பதைப் படிக்கும்போது, இதென்ன விசித்திரம் எனத் தோன்றி விடாதபடி பார்த்துக் கொள்கிறது, கவிதையின் நயம். மஞ்சரே என்தன் மனநிகழ்ச்சி காணிரோ? காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன் என்றதுவே. என்று சின்னக்குயில் கவியிடம் கூறிற்றாம். பழைய தமிழிலிருந்து பிரிந்து சென்ற மலையாளத்தில் அழுகையைக் கரைதல் என்று சொல்கின்றனர். பழந்தமிழ்ச் சொல்லின் ஆட்சி காதலின் சோகத்திற்குக் கை கொடுக்கிறது. குரங்கு பொதுவாக அழகற்றதாகக் கருதப்படினும் இக்காதற் பாட்டில் குயிலின் வாயிலாக அழகுப் பொருளாகிறது. அழகு என்பது காணப்படும் பொருளில் இல்லை. காண்பவரின் பார்வையில்தான் உள்ளது. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயிலாச்சுதடி எனும் அருட்பா அடிகளின்படி, மயிலைக் குயிலாக்குகிற ரசவாதம் கவிஞன் கைகளில் உள்ளது. பாரதியின் குயில் பாட்டுக்கான கற்பனை நிகழ்ந்த இடம் உண்மையில் உள்ளதே. அதன் காட்சிஸ்தலம் புதுச்சேரியிலுள்ள கிருஷ்ணசாமி செட்டியார் தோட்டம் என்பார் பாரதியின் நண்பர் அறிஞர் வ.ரா. பேடைக்குயில் வான் கிளையில் வீற்றிருந்து பாடியதில் தொக்கியிருந்த பொருள் 'காதல்’ என்பர் கு.ப.ராவும் சிட்டியும், கவியுளம் காணும் முயற்சியில். மக்களினத்திற்கு மரணமில்லாப் பெரு வாழ்வினை விழைந்தார், வள்ளற் பெருமான். அந்த மரணமில்லாப் பெரு வாழ்விற்குக் கருவியாக பாரதி கண்டது காதல், காதல், காதலேயாம் என்பதைக் குயில்பாட்டு குவலய மாந்தருக்குக் கூவியழைத்துச் சொல்கிறது. பிறவிகள் வரலாம். போகலாம் இடையில் மரணம் ஒரு சாதாரண நிகழ்வே. இதனால்தான் பாரதி கூறினான்: காதலினாற் சாகாம லிருத்தல் கூடும் கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம்.