பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில்லென்று பூத்த சிறு குறிஞ்சி மலர்கள் (அணிந்துரை) அறிஞர் தமிழண்ணல் பனிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்; குறிஞ்சிப் பூக்களைப் பார்ப்பதற்கு! அதுவும் கார்காலத்தில்தான் பூக்கும். மலைச்சாரல் முழுவதும், நீலநிறச் சின்னஞ்சிறிய குறிஞ்சிப் பூக்கள் சில்லென்று பூத்திருக்கும்! அத்துணை அரிய மலர்கள் அவை! மலைத் தேனடை மிகப் பெரிய வட்டமாய் இருக்கும், செந்நிறப் பகலவனைப்போல அதிலுள்ள தேனெல்லாம் இச்சின்னஞ்சிறிய குறிஞ்சிமலர்கள் தந்ததாம். சங்கப் புலவன் பாடினான்; ‘கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு, பெருந்தேன் இழைக்கும் நாடன் என்று. வலிய அடித்தண்டினையுடைய, சின்னஞ்சிறு குறிஞ்சிப்பூவைக் கொண்டு, பென்னம் பெரிய தேனடையைக் கட்டும் மலைநாடன், அக் காதலன். இதில் ஒரு வியப்பு அடங்கியிருக்கிறது. இச் சின்னஞ்சிறிய உருவமுள்ள மனிதர்கள் விளைவிக்கும் அன்பு, காதல், பாசம் எவ்வளவு பெரிதாய் இருக்கிறது. அடடே, அது 'நிலத்தினும் பெரிது, வானிலும் உயர்ந்தது, நீரினும் அளவற்ற ஆழமானது'! 町