பக்கம்:முகவரிகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால் மட்டும் ஊனம். அந்த ஊனக்காலை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெட்டியாகத் தாவி ஏறுகிறாள். தத்தித் தத்தி வரும் அவளை அவன் பார்வையில் காட்டுகிறார் ஆசிரியர்:

   'சேற்றுப் புறத்திலிருந்து வந்து கொழுத்த
    தவளையைப் போலிருந்தாள் அவள்'

எவ்வளவு பொருத்தமான கற்பனை. ஆசை அந்தஸ்தையா பார்க்கிறது? அவன் சில நிமிடம் சபலம் கொண்டான். பாவம்... கடைசியில் அவளுக்குக் கிட்டியது களிப்பு அல்ல; வெறும் 'சுழிப்பு'.

'துறவும்' என்ன 'உறவும்' நமக்கு ஒரே கருத்தையே உணர்த்துகின்றன. பிசிராந்தையும் சோழனும் போலச் சந்தித்தேயிராத இரண்டு இதயங்களும் எப்போதோ ஓரிரு முறை மட்டுமே சந்தித்த இரண்டு உயிர்களும் சந்திக்கிற அல்லது சம்பந்தப்படுகிற இறுதிக் காட்சிகள் நம் கண்களில் நீரை வரவழைக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

கல்லுக்குள் ஈரமும் கருமியின் நெஞ்சத்தில் இரக்கமும் இருக்கக்கூடும் என்ற கருத்தமைந்த 'கருமியின் நெஞ்சம்' எதார்த்தமாக இல்லை. சுருக்கமாகச்சொன்னால் பானுமதி ராமகிருஷ்ணாவின் இந்தக் கதை ஒரு நட்சத்திரக் கதை.

'பூச்சரம்' - ஒரு வழக்கமான காதற் கதைதான். எனினும் அவ்வளவு எளிதாக முகஞ் சுளித்து அதனை ஒதுக்க முடியவில்லை. சீதாவுக்காகக் கை நிறைய, மனம் நிறைய பூப் பறித்துக் கொடுத்த சங்கரன், அவளுக்குப் பூமாலை சூட்ட முடியாமல் மஜ்னுவாகிறான். அந்தத் தெப்பக் குளக்கரையில், அந்த மகிழ மரத்தடியில் இன்னும் மாலை தொடுத்துக் கொண்டிருக்கிறான் - சீதா வருவாள் என்ற நம்பிக்கையில், ஆசையில்!

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/87&oldid=970646" இலிருந்து மீள்விக்கப்பட்டது