பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

13


தப்பித்துக் கொள்கின்ற தன்மை, ஐந்தறிவு உயிர்களுக்கு உண்டு.

ஆனால், பிங்கலர் ஆறறிவுயிர் என்று மேலும் ஒரு பிரிவைப் பெருமையாகப் பேசுகின்றார்.

மனனோடு, ஆறறிவினரே மக்கள்
ஒருசார் விலங்கு அதுபெறு குறித்தே!
!

உணர்தல், நாக்கு, மூக்கு, கண், செவி எனும் ஐம்புலன்களுடன், ஆறாவது புலனாக மனம் என்பதை இங்கே இணைத்துள்ளார்.

மனம் என்ற சொல்லுக்கு இத்தனை பொருட்களா? இந்தப் பொருளுக்குள்ளே நிறைந்து கிடக்கும் உட்பொருளை அறிகிறபோதுதான் மனதின் மகிமையும் மாண்பும் மகத்தான பெருமையும் நமக்குப் புரிகின்றது.

மன்+அம் தான் மனம் ஆயிற்று.

அம் என்றால் அழகு. மன் என்றால் சிந்தித்தல், பொருந்துதல் என்று அர்த்தம். அழகாக, சிந்திப்பதற்கு மனம் என்று பெயர் வாழ்வில் நிகழ்வதற்கேற்ப பொருத்தமாக சிந்திக்கத் தெரிந்ததுதான் மனம்.

சிந்திக்கின்ற சக்தியைப் படைத்தவனைத் தான் மனிதன் என்றனர். மனசு உள்ளவன் மனுஷன் என்றும், மனசு உள்ளவள் மனுஷி என்றும் அழைக்கப்பட்டார்கள்.

சிந்திக்கிறவன்தான் மனிதன் என்பதற்காக, மனிதன் என்ற சொல்லுக்குள்ளேயே மன் என்ற சொல்லையும் இணைத்து வைத்திருக்கின்றார்கள் பாருங்கள்.