பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


2. மகிழ்ச்சி:

இதை ஆங்கிலத்தில் Joy என்றும் Delight என்றும் கூறுவார்கள்.

மனம் என்றால் கவலைப்படுவது, கலக்கப்படுவது, குழப்பிக் கொள்வது, உழப்பிக் கொள்வது, உருகித் தொலைப்பது என்று சிக்குண்ட நூல் கண்டாகிவிடும்.

அதைப்போல் மனதுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. நினைவுகளுக்கு எந்தச் சிணுங்கலும் இல்லை. மனம் தெளிவாகவே இருக்கிறது. கவலைகள் எதுவும் புகவில்லை என்ற இனிய நிலைதான் மகிழ்ச்சி ஆகிறது.

மகிழ மரம் தனது பூக்களால் பெருமை பெறுகிறது. மகிழம் பூ நிறைய பூத்துக் குலுங்கும் தன்மை உள்ளது.

மகிழ்வு ஆகிய மகிழ்ச்சிப் பூக்களை முகத்தில் பூத்துக் குலுங்குவதையே மகிழ்ச்சி (Gladness) என்கிறோம்.

குறையில்லாத மனதுக்கு உண்டாகும் இனிய நிலையே மகிழ்ச்சியாகும்.

3. ஆனந்தம்:

இதற்குப் பேரின்பம் என்ற பெயருண்டு. பரமானந்தம் என்பார்கள். இதை ஆங்கிலத்தில் Great Joy என்றும் Happiness என்றும் கூறுவார்கள்.

ஆனந்தம் என்பது ஆன்மாவிற்குக் குறையில்லாத நிலை. உடலால் குறையில்லை. மனதால் குறையில்லை என்ற மொத்தமான மறுமலர்ச்சி நிலைதான் ஆனந்தமாகும்.