பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

83


உடல் என்றால் இரத்தமும், சதையும், எலும்பும், நரம்பும் கொண்ட கூட்டுச் சரக்கு என்பார்கள். இந்த உடலைக் கொஞ்சம் கவனிக்காமல் விட்டுவிட்டால், முதலில் வருவது நாற்றம். அப்புறம் எத்தனை மாற்றம் ஏற்படுகிறது தெரியுமா?

“நல்ல, நல்லபழக்கம்” என்று சொல்லிச்சொல்லிப் பின்பற்றினால்தான், உடலும் நலமாக வாழும். பலமாக வளரும். அதாவது நல்ல உணவு, நல்ல பழக்கம், நல்ல வழக்கம், நல்ல பண்புகள், நல்ல செயல்கள் என்பதுபோல.

நல்ல என்பது அல்ல என்று மாறினால், பொல்லாத நோய்கள் உடலுக்குள்ளே புகுந்து, புறப்பட்டு வெளிவந்து விடும். பிறகு என்ன? புலம்பலும் கலங்கலும்தான்.

அதனால்தான் பழம் பாடல் ஒன்று இப்படிக் கூறுகிறது.

“சம்பத்துடன் பிணியிலே மெலிவதின்
நோயற்ற தரித்திரம் நன்று காண்”

பிணியுள்ளவன் என்ன செய்ய முடியும்! மனிதனாகக் கூட அவனால் உலவ முடியாது. அவனை ‘செத்தபிணம்’ என்றல்லவா இகழ்ச்சியாகப் பேசுகின்றார்கள்.

இந்தச் சுகத்திற்கு எவ்வளவு மதிப்பும், பெருமையும் இருக்கிறது பாருங்கள். புத்தரின் போதனை என்ன? ஆசையை அடக்குங்கள் என்பதுதான். ஆசைதான்