பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இராமாயணத்திலே சூர்ப்பனகையே சாட்சியாகக் காட்சி தருகிறாள். சூர்ப்பனகையின் அறுபட்ட மூக்கைக் கம்பன், “தூம்பு எனத் தெரிந்த மூக்கினள்” என்றான்.

இராமாயணத்திலே தூக்கத்திற்குப் பேர்போனவன் கும்பகர்ணன். அவன் படுத்துத் தூங்கும்போது, அவனது இரண்டு மூக்குத் துவாரங்களும், ஒருமலையில் உள்ள இரண்டு பெரும் குகைகளைப் போல இருந்ததாம். அவன் மூச்சுக் காற்றினை இழுக்கும்போது அருகிருந்த உயிர்கள் உற்றனவும், உயிர்கள் அற்றனவும் மூக்கிற்குள் போய்புகுந்து கொள்ளுமாம். அவன் மூச்சை விடும்போது அவைகள் பதறிப்போய் வெளியே வந்து விழுமாம். அவ்வளவு அரிய, பெரிய மூக்கிற்குச் சொந்தக்காரன் அந்தக் கும்பகர்ணன் என்பார்கள்.

“அதோ போகிறானே! அவனைப் பாருங்கள்; மூக்கும், முழியுமா - எவ்வளவு லெட்சணமாக இருக்கிறான்” என்பார்கள். விழியை முழியென்றவர்கள், மூக்கை மட்டும் மூக்கென்றே மொழிவார்கள். ஆகவே, முக லெட்சணத்திற்கு, அதாவது முக வசீகரத்துக்கு மூக்கும் ஒரு காரணமாக இருக்கிறது என்பது தெரிகிறதல்லவா.

சப்பை மூக்கு, ஊளை மூக்கு, குடமிளகாய் மூக்கு என்றெல்லாம் மூக்கைப் பழித்துரைப்பார்கள். இவையெல்லாம் அழகும். நல்ல அமைப்பும், எடுப்பும், எழிலும் இல்லாத மூக்குகளைத்தானே விவரிப்பார்கள் மூக்கு நுகர்வதற்கும், சுவாசிப்பதற்கும் மட்டுமன்று, முகவசீகரத்திற்கும் உரிய ஒன்றாகவே இருக்கக் காண்கிறோம்.