பக்கம்:முடியரசன் கவிதைகள்-1.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவுடைமை ஆட்சியினை இரவுப் போதில்
புரிகின்ற முழுமதியே! உன்னைக் கண்டு
மதுவுண்ட வண்டானேன் இன்பப் பாடல்
வாய்குளிர மனங்குளிரப் பாடி நின்றேன்;
புதுவுலகம் விரைவினில் நாம் காண வேண்டின்
பொலிவுபெறும் முழுமதியர் ஆட்சி வேண்டும்
இது உண்மை என நினைந்தேன்; களங்கம் உன்பால்
இருக்கின்ற தெனஒருவன் இயம்பி னானே!(௩)

நிறைமதியர் நிலவுலகம் நிலைக்குங் காறும்
நீள் புகழால் ஒளிபரப்பு வார், இவ் வுண்மை
நிறைமதியம் இரவிங்கு நிற்குங் காறும்
நெடுங்கதிரால் ஒளிபரப்பிக் காட்டும்; மேலும்
குறைமதியர் புகழெல்லாம் வெளிப்ப கட்டாய்க்
குறைந்துவிடும் மிகவிரைவில் என்ற உண்மை
குறைமதியம் சிறுநேரம் பகட்டி வானிற்
கூத்தாடி மறைந்துநமக் கெடுத்துக் காட்டும்(௪)

மதியுடையார் பேசுவதைக் கேட்டல் நன்று
மாண்புவரும் எனக்குழுமும் விண்மீன் கூட்டம்;
அதுமகிழ வானத்து மேடை ஏறி
அம்புலியார் சொற்பொழிய முகிலன் ஓடி
எதிரியெனக் கூட்டத்துள் ஒளிம றைத்தான்,
இடியிடித்தான், குழப்பத்தை ஆக்கி விட்டான்;
இதிலென்ன கண்டனனோ ? மதியர் நாளை
ஏறாமல் இருப்பாரோ மேடை மீது?(௫)

21