பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38


19. தாள் பணிந்தேன்
கலி வெண்பா

 
....................................
....................................
காலத்தை வென்றவளே, கற்பனைக்கும் எட்டாமல்
ஞாலத்தில் நின்றொளிரும் நந்தா மணிவிளக்கே,
நெஞ்சத் திருக்கோவில் நின்றிருந் தெந்நாளும்
அஞ்சலெனச் சொல்லி அரவணைக்குந் தெய்வதமே,
நெஞ்சை அகலாக்கி நீங்காத அன்பென்னும்
பஞ்சைத் திரியாக்கிப் பற்றும் உணர்வை
எரியாக்கி ஏற்றும் எழில்விளக்கே, முன்னைப்
பெரியார்க்குந் தோன்றாப் பெருமை படைத்தவளே,
சங்கத்தார் நெஞ்சமெனுந் தண்பொழிலிற் கூடிமனம்
பொங்கத்தான் ஆடிவரும் புள்ளி எழில்மயிலே.
பாவாணர் நாவிற் பழகிப் பழகிநின்று
கூவாமற் கூவிக் குளிர்விக்கும் பூங்குயிலே,
அப்பாலும் இப்பாலும் ஆடித் திரியாமல்
தப்பேதுஞ் செய்யாமல் தக்க நெறிநடக்க
எப்போதும் நன்றுரைத் தெம்மைப் புரப்பதற்கு
முப்பாலைத் தந்து முறைப்படுத்தும் நற்றாயே,
மோதும் பகைதவிர்க்க மொய்ம்பு[1]டனே சென்றங்குத்
தூதுசொலி மீண்ட துணிவுடைய பாட்டரசி
அவ்வைப் பெருமாட்டி ஆண்டாண்டு வாழ்ந்திடவே
செய்வித்த பேராற்றல் சேரும் செழுங்கனியே,
கற்புக் கடம்பூண்ட கண்ணகியாம் பெண்மகளைப்
பொற்புடைய தெய்வமெனப் போற்றி வணங்குதற்குக்
கற்கோவில் அன்றெடுத்த நற்கோவின் பின்வந்த
சொற்கோவின் காப்பியத்துள் தோன்றிவரும் யாழிசையே,


  1. மொய்ம்பு - விருப்பம்