பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

ஆய்ந்தமொழி செந்தமிழென் றானதென நானுரைப்பேன்;
ஆரியத்தார் ஆட்சிமுதல் ஆங்கிலத்தா ராட்சிவரை
சீரழித்த ஆட்சிகளைச் செப்பத் தொலையாது;
தேன்மொழியாந் தென்மொழியின் சீர்மை பரவிவர
மீன்புலிவில் ஏந்திநல் மேலோர் துணைநின்று
காத்ததிரு நாட்டிற் கதவு திறந்திருக்கப்
பார்த்திங்கு வேற்றுப் பகைமொழிகள் உள்நுழைந்து
நீக்கமற எங்கும் நிறைந்தாலும் நம்மினத்தார்
தூக்கங் கலையாமல் சோர்ந்து கிடந்தாலும்
நான்வணங்குந் தெய்வ நலமிக்க செந்தமிழ்த்தாய்
தேன்வழங்கும் நாண்மலர்போல் என்முன் திகழ்கின்றாள்;
அன்னை திருமுகத்தில் அணுவளவும் சோர்வின்றி
என்னை வளர்க்கின்றாள் இல்வுலகைக் காக்கின்றாள்;
.........................................................................
.........................................................................
எங்கெங்குந் தாய்மொழிக் கேற்றம் மிகக் காண்போம்
இங்கினிநம் செந்தமிழ்க்கோர் ஏறுமுகம் ஈதுறுதி
எங்குத் தமிழாகும் எல்லாந் தமிழாகும்
பொங்கும் இனிமேற் பொலிந்து

[தாய்மொழி காப்போம்]

('தமிழின் செம்மை' எனுந்தலைப்பில் பாடப்பெற்ற கவிதையிலிருந்து எடுக்கப்பெற்ற சில அடிகள் மட்டும் இங்கு தரப்பட்டுள்ளன.)