பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

         “வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்
        கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ்
        நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே
        ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே”

என்று அன்னைத் தமிழுக்கு மட்டுமே தலைவணங்கினார்.

“இறைவழிபாடு தமிழில்தான் வேண்டும்” எனத் தமிழர் குரல் ஓங்கி ஒலிக்கும் இக்காலகட்டத்தில், இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அதற்குத் தக்கவையாகும். தமிழியக்கத்தின் இன்னொரு படைக்கலனாக இந்நூலைத் தமிழன்பர்கள் கைக்கொள்வாராக.

தாய்த் தமிழைப் போற்றிப் புரப்பதன் வழி, தமிழை வழிபாட்டு மொழியாக மட்டுமன்றி, பல்துறைப் பயன்பாட்டு மொழியாக்கி, பயிற்றுமொழியாக்கி, அறிவியல் மொழியாக்கி, அறமன்ற, ஆட்சிமொழியாக்கி, அன்னைத் தமிழை அரியணை ஏற்றி நல்வாழ்வு பெறுவோமாக.

முடியரசன் குடில், அன்பன்.

காரைக்குடி. மு.பாரி


"கவியரசு முடியரசன் தமக்கெனத் தனிப்பாணி வகுத்துக் கொண்டு, கவிதையே மூச்சாக வாழ்ந்தவர். அவருக்கு அது ஒரு தொழிலாக மட்டுமன்று; உயிர் மூச்சாகவே இயங்கி வந்தது. தமிழ் அவரது உயிர். எமக்குத் தெரிந்தவரை தமிழை இத்துணை நேசித்த ஒருவரை யாம் இதுவரை கண்டதில்லை என்போம். அதனால் தமிழ் உள்ள அளவும் வாழ்வு பெறும் கவிதைகளை அவர் தந்து சென்றுள்ளார்."

- முனைவர் தமிழண்ணல்
(கவிஞரின் மறைவினையொட்டி, தினமணி (05.12.1998) நாளிதழில், முனைவர் தமிழண்ணல் எழுதிய 'பாடிப் பறந்த பறவை' எனும் கட்டுரையிலிருந்து.)