பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 கேட்டிருக்கான். சும்மாகொண்டுபோய்க்கொடு, நான்சொன்னேன்னு சொல்லிக் கொடு, அப்படி மீறிக்கேட்டால் இதை அவன் முகத்திலே வுட்டுக்கடாசு என்று பத்து உருவாத் தாளொன்றை வீசியெறிந்தார். பணம் இல்லாமல் யாராவது விளம்பரம் வெளியிடுவார்களா? அதுவும் பத்து உருவாவுக்கு வெளியிடுவார்களா? கல்கி இதழோ மிகப் பெரிய அளவில் விற்பனையாகும் இதழ். அவ்விதழில், பணம் பெறாமல் வெளியிட முன் வருவார்களா? என்றெல்லாம் எண்ணிப் பார்க்கத் தெரியவில்லை கவிஞருக்கு! நாடு நமக்குச்சொந்தம்; நாட்டில் உள்ளவை அனைத்தும் நமக்குச் சொந்தம்; நாம் சொன்னது நடக்க வேண்டும் என்ற கற்பனை உரிமை கொண்டவர்கள் கவிஞர்கள். பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலிக்கும் வேந்தர்களல்லவா கவிஞர்கள்? ஆம், இவரும் பாவேந்தர்தானே. அதனால் காசில்லாமல் விளம்பரம் வெளியிடுமாறு ஆணையிடுகிறார். கவியரங்கொன்றிற் கலந்து கொள்ளுமாறு திருச்சி வானொலி நிலையத்தார் பாவேந்தருக்கு அழைப்பு விடுத்தனர். பெற்றுக் கொண்ட கவிஞர், இருநூறு உரூவா தந்தால் வருவேன்' என்று மறுமொழி எழுதிவிட்டார். இருநூறு கொடுப்பது வானொலியார் கணக்குக்கு ஒத்து வராது. கவிஞருக்கு இதை எழுதி இசைய வைக்கவும் இயலாது. என்ன செய்வதென்று அவர்களுக்கு ஒன்றுந் தெரியவில்லை. இறுதியாகக் கூடிச் சிந்தித்து ஒருமுடிவு செய்து இருநூறு தருவதாக எழுதிவிட்டுப் பதிவு செய்து கொள்வதற்காகப் பாரதியாரைப்பற்றிப் பேசவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். கவிஞரும் இசைவளித்து விட்டார். 14-1-1957 ல் கவியரங்கம், தலைவர், செந்தமிழ்க் காவலரி அ.சிதம்பரநாதச் செட்டியார். அவ்வரங்கில் யோகி சுத்தானந்த பாரதியார் முதலானோர் கலந்து கொண்டனர். நானும் கலந்து கொண்டேன். பாவேந்தர் பாடி முடித்துக் கீழே அமர்ந்தார். அடுத்து சுத்தானந்த பாரதியார் பாட எழுந்து சுதிப் பெட்டியை தோளில் மாட்டிக் கொண்டு, சுதி போடத் தொடங்கினார். கீழே அமர்ந்திருந்து பாவேந்தர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். அப்பார்வையில் எவ்வளவு பொருள் நிறைந்திருந்தது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.