பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அளிபெறு தும்பி அண்ணலார் புதுக்கோட்டைத் திருக்குறட் கழகத் தலைவர் அண்ணல் பு. அ. சுப்பிரமணியனார், போற்றிப் பாராட்டத்தக்க மீமிசை மாந்தர். குறள் நெறி வழுவாக் கோமான். கல்வித் தொண்டே கடவுள் தொண்டெனுங் குறிக்கோளுடன் வாழ்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுட் பலர் இவர் உதவியால் கற்று முன்னேறியுள்ளனர். பெரும்புலவர் பலர்க்குப் புரவலராக வாழ்ந்தவர். நடுத்தர வகுப்பைச் சார்ந்தவர் எனினும் தம் வருவாயில் பெரும் பகுதியை ஏழை மாணவர் கல்விக்காக நல்கியவர். இவர்தம் உதவியால் மருத்துவப் பேரறிஞர்கள், பொறியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள் பிறபிற துறை வல்லுநர்கள் உருவாகியுள்ளனர். சுருங்கக் கூறின் புதுக்கோட்டையே இவரால் புதுமை பெற்றது என்னலாம். பிறர்க்கென வாழும் பெற்றியர். இற்றை நாளில் இவரனையாரைக் காண்டல் அரிது. எழுபதாம் அகவை வரை நான் உயிருடன் வாழ்ந்து, என் வரலாற்றையும் எழுதுகிறேன் என்றால் அதற்குக் காரணராக இருந்த பெருமகனார் அண்ணல் சுப்பிரமணியனார்தாம். அவர்தம் தலையளி எனக்கு வாய்க்கப் பெறவில்லையென்றால் முடியரசன் இறந்து முப்பத்தைந்து ஆண்டுகளாகியிருக்கும். என் முப்பத்தைந்தாம் அகவையில் குருதி உமிழும் கொடிய நோய்க்கு ஆளாகினேன். நடக்க வியலாது; பேச இயலாது; சிரிக்கவும் இயலாது. அந்த அளவிற்கு நோயின் கடுமை மிக்கிருந்தது. இந்நிலையில் என்னை அழைத்துப் புதுக்கோட்டையிலேயே தங்க வைத்து, முழுச் செலவும் தாமே செய்து, மருத்துவப் பேரறிஞர்