இதுகாறும் எழுதியுள்ள பல அதிகாரங்களால் பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சோழமண்டலத்தில் சக்கரவர்த்தியாக வீற்றிருந்து நம் தமிழகத்தையும் இதற்கப்பாலுள்ள பிறநாடுகளையும் ஆட்சி புரிந்த முடிமன்னனாகிய முதற் குலோத்துங்கசோழனது வர லாற்றை ஒருவாறு நன்குணரலாம். அன்றியும் சற்றேறக் குறைய ஐம்பது ஆண்டுகள் வரை நம் தமிழகத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இவ்வரலாற்று நூல் இயன்ற வரை இனிது விளக்காநிற்கும். நல்வினை முதிர்ச்சியால் அறிவு திருவாற்றல்களுடன் நிலவிய நம் வேந்தர்பெரு மான் கடைச்சங்கநாளில் சிறப்புடன் விளங்கிய சோழன் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலான முடிமன்னர் களோடு ஒருங்குவைத்து எண்ணத்தக்க பெருமையும் புகழும் உடையவன் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இத்தகைய பெருவீரன் அரசுவீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடைநகரம் கங்கைகொண்டசோழபுரம் ஆகும். நம் குலோத்துங்கனது தாய்ப்பாட்டனாகிய கங்கைகொண்டசோழனால் அமைக்கப்பெற்ற இப்பெருநகரம் அவ்வேந்தன் காலத்திலேயே சோழமண்டலத்திற்குத் தலைநகராகும் பெருமை எய்திற்று. அவனுக்குப் பின்னர், சோழர்களது ஆட்சியின் இறுதிவரை இந்நகரமே எல்லாச் சோழமன்னர்களுக்கும் தலைநகராக