பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

முதற் குலோத்துங்க சோழன்

கண்டான்.[1] அளத்தியில் நிகழ்ந்த போரில், இவன் மேலைச் சளுக்கியர்களுடைய களிறுகளைக் கவர்ந்து கொண்டான். அன்றியும், இவன் மைசூர் நாட்டிலுள்ள நவிலையில் சளுக்கிய தண்டநாயகர்களால் காக்கப்பெற்ற ஆயிரம் யானைகளையும் கைப்பற்றிக்கொண்டனன் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.[2] இறுதியில் துங்கபத்திரைக் கரையில்[3] இரண்டாம்முறை நடைபெற்ற போரில் விக்கிரமாதித்தனும் சயசிங்கனும் தோல்வியுற்று ஓடி ஒளிந்தனர். கங்கமண்டலமும் கொண்கானமும் நம் குலோத்துங்கன் வசமாயின. இங்ஙனம் போரில் வாகை சூடிய குலோத்துங்கன் எண்ணிறந்த யானைகளையும் பொருட்குவியலையும் பெண்டிர்களையும் கவர்ந்துகொண்டு சோணாட்டையடைந்தான்; அவற்றுள், யானைகளையும் பொருட்குவியலையும் தான் போரில் வெற்றிபெறுவதற்குக் காரணமாயிருந்த போர் வீரர்களுக்குப் படைத் தலைவர்களுக்கும் பகுத்துக் கொடுத்து அவர்களுக்கு மகிழ்ச்சியை யுண்டுபண்ணினான்; சிறை பிடிக்கப்பட்ட மகளிரைத் தன் அரண்மனையிலுள்ள தேவிமார்களுக்கு வேலை செய்துவருமாறு வேளம் புகுவித்தான். நம்


  1. 4 (1) தளத்தொடும்பொரு தண்டெழப் பண்டொர்நாள் அளத்தி பட்ட தறிந்திலை யையநீ.' - க. பரணி- தா. 372 (b) - வில்லது கோடா வேள் குலத் தரசர் அளத்தியி லிட்ட களிற்றின தீட்டமும் ' - முதற்குலோத்துங்க சோழன் மெய்க்கீர்த்தி.
  2. 5. 'தண்ட நாயகர் காக்கு நவிலையிற் கொண்ட வாயிரங் குஞ்சர மல்லவோ' - க. பரணி-தா. 373
  3. 6. க. பரணி - தா. 89.