பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போர்ச்செயல்கள்

47

தூண்களும் நிறுவினான். இப்போரில் குலோத்துங்கன் கைப்பற்றிய நாடுகளுள் முத்துச்சலாபத்திற்குரிய மன்னார்குடாக்கடலைச் சார்ந்த நாடும் பொதியிற் கூற்றமும் கன்னியாகுமரிப் பகுதியும் சிறந்தவைகளாகும்.

5. சேரருடன் நடத்திய போர் :- இது நம் குலோத்துங்கன் குடமலைநாட்டில் சேரரோடு நடத்திய போராகும். இதுவும் குலோத்துங்கனது ஆட்சியின் 11-ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரும் சேரரைத் தனக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர்களாகச் செய்யும் வண்ணம் குலோத்துங்கனால் தொடங்கப்பெற்றது. திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் மேலைக்கடற்கோடியிலுள்ள விழிஞத்திலும், திருவனந்தபுரத்தைச் சார்ந்த காந்தளூர்ச்சாலையிலும் குமரி முனைக்கு வடக்கிலுள்ள கோட்டாறு என்ற ஊரிலும் சேர நாட்டு வேந்தனுக்கும் நம்குலோத்துங்கனுக்கும் பெரும் போர்கள் நடந்தன.[1] சிறிதும் அஞ்சாது எதிர்த்துப் போர்புரிந்த மலைநாட்டாருள் பலர் போர்க் களத்தில் உயிர் துறந்தனர். குலோத்துங்கன் காந்தளூர்ச் சாலையிலுள்ள சேரமன்னனது கப்பற்படையினை இருமுறையழித்துப் பெருமை எய்தினான். [2]கோட்டாறும் எரிகொளுத்தப்பெற்று அழிக்கப்பட்டது. சேரமன்னனும் குலோத்துங்கனுக்குத் திறைசெலுத்தும் சிற்றரசர்களுள் ஒருவனாயினன். சேரரும் பாண்டியரும் தம் நிலைமை சிறிது உயர்ந்தவுடன் தன்னுடன் முரண்பட்டுத்


  1. 'வேலை கொண்டு விழிஞ மழித்ததுஞ் சாலை கொண்டதுந் தண்டு கொண் டேயன்றோ' - பரணி - தா. 370
  2. விக்கிரமசோழனுலா-ண்ணி 24