பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

முதற் குலோத்துங்க சோழன்

யுங்கெட அமரில் எதிர் நிற்கமாட்டாது ஒதுங்கினர்; இப்படை மாயையோ மறலியோ வென்றலறிக்கொண்டு நிலை குலைந்து விழுந்து ஓடினர்; 'அபயம்' 'அபயம்' என்றலறிக் கொண்டு ஒருவர் முன்னர் ஒருவர் ஓடினர்; அங்ஙனம் ஓடிய கலிங்க வீரர் பதுங்கியது கன்முழையின் கண்ணோ ! மறைந்தது அரிய பிலத்தினுள்ளோ ! கரந்தது செறிந்த அடவியிலேயோ! இவற்றை முழுதுந் தெரிந்துகோடல் அரிதாகும். அவ்வாறு கலிங்கரோடப் பலப்பல யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், தேர்கள், மணிக்குவியல்கள், மகளிர்கள் ஆகிய எல்லாவற்றையும் கருணாகரனது படை வீரர்கள் கைப்பற்றினர். கைக்கொண்ட அன்னோரே அவற்றின் அளவைக் கணித்துரைப்பது அருமையெனின், மற்றையோர் அவற்றைக் கணித்துரைத்தல் எங்ஙனம் கூடும்!

இவற்றைக் கவர்ந்தபின் ' இனி கலிங்க மன்னனையும் கைக்கொண்டு பெயர்குதும் ; அவனிருக்கின்ற இடத்தையறிக' என்றனன் கருணாகரன். அவன் சொற்கள் பிற்படுமாறு சில வீரர்கள் விரைந்து சென்று வரைகளிலும் வனங்களிலும் தேடிக் காணப்பெறாது, முடிவில் ஒரு மலைக்குவட்டிற் கரந்திருந்த கலிங்கர் கோனைக் குறுகி ' நமது அடற்படையைக் கொணர்க ' வென்றனர். எனலும் அவனைக்கொணருமாறு கருணாகரன் தன் படைஞரை ஏவினன். அவர்கள் சென்று வெய்யோன் அத்தகிரியை அடையுமளவில் கலிங்க மன்னன் கரந்திருந்த வெற்பினையெய்தி வேலாலும் வில்லாலும் வேலிகோலி விடியளவுங்காத்து நின்றனர். பின்னர், செங்கதிரோன் உதயகிரியையடையுமுன்னர் அம்மன்னனைக் கைப்பற்றித் திரும்பினர்.