பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குணச்சிறப்பு

63

மொழியாகிய தெலுங்கே அரசாங்கமொழியாக அமைந்திருந்தது. வேங்கி நாட்டிலுள்ள இவனது கல்வெட்டுக்களும் தெலுங்கு மொழியில் காணப்படுகின்றன. எனவே, இவன் தெலுங்கு மொழியையும் கற்றவனாதல் வேண்டும். ஆகவே, தமிழ், ஆரியம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இவ்வேந்தன் நல்ல பயிற்சி யுடையவனாயிருந்தனன் என்பது நன்கு புலப்படுகின்றது.

அன்றியும் இவ்வேந்தன் இசைத் தமிழ்நூல் ஒன்று இயற்றியுள்ளனன் எனவும் அந்நாளில் இசைவாணர்களாகிய பாணர்கள் இவ்வேந்தனது இசை நாலைப் பயின்று நன்குபாடி வந்தனரெனவும் இவன் தேவிமார்களுள் ஒருத்தியாகிய ஏழிசைவல்லபி என்பாள் தன் கணவன் இயற்றிய இசைநூலைப் பயின்று நன்கு பாடி வந்தனள் எனவும் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் கூறியுள்ளார்.

நம் வளவர் பெருமான் நூலறிவு எய்தியிருந்ததோடு இயற்கையில் நுண்ணறிவும் அமையப்பெற்றிருந்தான் ; நல்லறிஞர்களோடு அளவளாவி அறியவேண்டியவற்றை நன்கறிந்து பேரறிஞனாய் விளங்கினான். ஆசிரியர் சயங் கொண்டார் இவனை ' அறிஞர் தம்பிரான் அபயன் '! என்று கலிங்கத்துப்பரணியில் கூறியிருத்தலும் இச்செய்தியை இனிது வலியுறுத்தும்.

இனி, இவ்வேந்தனது செங்கோற் பெருமையும்: பெரிதும் மதிக்கத்தக்கதாகும். இவன் ' குடியுயரக்கோல் உயரும்' என்பதை நன்குணர்ந்தவனாதலின் தன் நாட்டி லுள்ள குடிகள் எல்லோரும் வளம் பெறுதற்கேற்ற


4. க. பரணி - தா . 36.