பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ஒருவர் ஒரு நூலகம் வைப்பார். அவர் நூறு நூல்களை வாங்கி வைத்துக் கொள்வார். அவரிடம் ஒவ்வொருவரும் மாதச் சந்தாதாராகச் சேர்ந்துகொண்டு, மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைச் சந்தாவாகத் தந்துவருவர். இவ்வாறு சந்தா தருவோரே அந்த நூலகத்திலிருந்து நூல்களை வாங்கிப் படிப்பர். இத்தகைய முறையிலே நூலகம் நடத்துவது புதுமையாகத் தோன்றியதன்று பதினேழாம் நூற்றாண்டிலேயே சில நூல் விற்பனையாளர்கள் இந்த முறையைக் கையாண்டு நூல்களைக் கொடுத்து வந்தனர்.

1725 ல் பெஞ்சமின் பிராங்கிளின் என்பவர், தம் வீட்டுக்கருகிலேயிருந்த ஒரு நூல்விற்பனையாளரிடம் மேற்கூறிய முறையிலே நூல்களை வாங்கிப் படித்தார். அதே ஆண்டில் ஆலன் ராம்சே என்பவர், மேலே கூறிய வணிக நூலகம் ஒன்று ஏற்படுத்தினர். அந்த நூலகம் எடின்பரோவில் ஏற்படுத்தப்பட்டது. இதுவே முதன்முதல் ஏற்படுத்தப்பட்ட சுழல் நூலகமாகும். இது தோன்றிய பதினைந்தாண்டுகட்குப் பின்னர் இலண்டன் மாநகரிலே 'காத்தார்ன் கட்சு பிரிட்டிசு நூலகம்' (Cawthorn and Hutts British Library) ஒன்று தோன்றியது. இந் நூலகம் 1913 ஆம் ஆண்டுவரை நற் பணி பல செய்து, பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டிலே புகழொடு விளங்கிய தேயி நூலகத்தோடு (Days Library) இணைக்கப்பட்டு விட்டது. இன்று இங்கிலாந்திலே எண்ணிக்கையற்ற சுழல் நூலகங்கள் உள்ளன. அவற்றிலிருந்து நூல்கள் பெரிய நகரங்களுக்கு மட்டுமன்றிச் சிற்றுார்களுக்கும் செல்லுகின்றன. இச் சுழல் நூலகங்களின் கிளைகள் நாடு முழுவதும் இயங்கிவருகின்றன.