பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

பெறலாம். சிறந்த உலகின் சீரிய குடிமகனாக விளங்க வேண்டுமெனும் வேட்கைமிக்க ஒருவன், நல்லரசு, உள்ளாட்சி, நாட்டாட்சி, உலகாட்சி ஆகியவற்றைப்பற்றிச் சிறந்த அறிவு பெறுவதற்கும். பொருளாதார, சமுதாய நிலைமைகளை அறிந்து போற்றற்கும் பெரிதும் விருப்பங் கொள்கின்றான். சமைக்க, கோட்டம் அமைக்க, தட்டுமுட்டுப் பொருள்கள் செய்ய, வீட்டைப் பழுதுபார்க்க, புத்தம் புது விளையாட்டுக்கள் ஆட,நெய்ய, இதுபோலப் பல காரியங்கள் செய்யச் சிலர் நூலகத்தை நாடுகின்றனர். அயல் மொழிகளைக் கற்கச் சிலர் நூலகம் செல்லுகின்றனர். இன்னும் நூலகம் நாடுவோரின் வகையை நாம் விரித்துக்கொண்டே போகலாம்.

நூலகம் ஏற்படுத்தல் என்பது பலபொருள் பற்றிய பலவேறு நூல்களை வழங்குதல் மட்டுமன்று; பல காரியங்களுக்காக வருகின்றவருக்கு ஏற்ற முறையிலே, ஒரு குறிப்பிட்ட துறையிலே தோன்றிய கருத்துக்கள் எல்லாவற்றையும் கொண்ட நூல்கள், பொருட்பிரிவுகள் கொண்டு இலங்குதல் வேண்டும். எல்லாவித நூல்களும் நூலகத்திலே இருத்தல் வேண்டும். நூலகத் தலைவரின் முக்கிய வேலையே, சரியான நூல்களை வாங்கிவைத்தல் மட்டுமன்று அவற்றை விரும்புவார் கையில் கிடைக்கவும் செய்வதே ஆம். நூலகம் வருவோர் சிறந்தவர் உதவியை வேண்டுவர். எனவே பிரிட்டன் நூலகங்களிலே, நீண்ட நாள் பணிசெய்த நூலகத்தலைவர் எப்பொழுதும் இருப்பர்.

பயன் மிக்க, இன்பந்தரவல்ல எல்லாவித நூல்களையும் படிப்பதனால் மக்கள் சீரிய அறிவு பெறுகின்றனர்