பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[T] பெரியோர் கேண்மை மக்களாகப் பிறந்த ஒவ்வொருவர் வாழ்விலும் பெரியோர்களது தொடர்பு மிகவும் இன்றியமையாதது என்பது ஒரு பேருண்மை. அவர்களிடம் பெறும் உதவி மிகச் சிறிதாக இருப்பினும், அவர்தம் ஆசி என்றுமே இருந்து கொண்டிருக்கும். இது தவிர, சிற்றினம் சேராது தவிர்க்கப் பெறுவது நாம் அடையும் பெரிய வாய்ப்பாகவும் அமையும். இதனை நீள நினைந்தே வள்ளுவப் பெருந்தகை பெரியாரைத் துணைக் கோடல் (அதி - 45) ஓர் அதிகாரத்தையே தமது நூலில் வகுத்துக் கொண்டு பத்துக் குறளில் பல்வேறு நோக்கில் பல பட விரித்தோதுகின்றார். அண்ணலின் வாழ்வில் பெரியோர் கேண்மை பல சிறப்புகளை நல்கியுள்ளது. சிறு வயது முதற் கொண்டே பெரும் புலவர்களின் தொடர்பு ஏற்பட்டது இறைவனது திருவுள்ளக் குறிப்பு. அத்தொடர்பு இறுதிவரை தொடர்ந்து நடைபெற்றுள்ளது. 'மல்லல் பேர்யாற்று நீர்வழிப்படுஉம் புணை போல், முறை வழிப்படும் ஆருயிர் (புறம் - 192) என்பது சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் திருவாக்கு அல்லவா? என் நிலையும் இது போன்றதே. மூன்று வயதில் தந்தையை இழந்த அடியேனது வாழ்வில் பெரியோரை நாடும் பண்பு அடியேனிடம் இயல்பாகவே அமைந்தது இறைவனது திருக்குறிப்பேயாகும். இன்றுவரை (அகவை 84)