பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முத்தமிழ் மதுரை


1. தோற்றுவாய்

வரலாற்றின் முதன்மை

நம் நாட்டின் வரலாற்றை நாம் ஆவலுடன் படிக்கின்றோம். நம் நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டுமென்ற அவாவும் நம்மிடம் இருக்கிறது. நம் நாட்டின்கண் முன்னாளிலே இருந்த தலைவர்களும் பெரியார்களும் நம் உள்ளத்தில் நிலையான இடம்பெற்று நிலவுகின்றனர்.

மறப்பண்பு மிகுந்த நம் நாட்டு மாவீரர்களின் வரலாறுகளை நாம் படிக்கின்றோம். நம் உள்ளமும் அதனால் வீறுகொள்ளுகின்றது.

அறப்பண்பிலே சிறந்திருந்த ஆன்றோர்களின் வரலாறுகளை நாம் கற்கின்றோம். அத்தகைய அறவாழ்விலே நம் உள்ளமும் செல்லத் தொடங்குகின்றது.

நாட்டுக்காகத் துயரங்களை ஏற்ற நல்லவர்களின் வரலாறுகள், நாட்டுப் பணியிலே ஈடுபட வேண்டுமென்ற ஆர்வத்தை நம்மிடமும் எழச் செய்கின்றன.

நீதிக்காக உயிர்துறந்த நேர்மையாளர்களின் வரலாறுகள், நன்னெறியிலே நம் உள்ளத்தைக் கொண்டு செலுத்துகின்றன.

இப்படியாகக் கடந்த காலத்தே வாழ்ந்து, செயற்கரிய செய்து சிறப்புற்ற நம் மூதாதையரின் வரலாறுகள், நம்முடைய வாழ்வின் நலனுக்கும் செம்மைக்கும் துணைபுரிகின்றன. இதனாலேதான், பெரியோர்கள், ‘நம் நாட்டு வரலாற்றினை நாம் ஒவ்வொருவரும் தவறாமல் அறிந்திருக்க வேண்டும்’ என்று வலியுறுத்திக் கூறுகின்றார்கள்.

தமிழகத்தின் வரலாறு

பாரதநாடு என்ற நம் நாடானது, பல்வேறு தேசீய இனங்களையும் மொழிகளையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் ஒரு பரந்த பெருநாடு ஆகும். ஆகவே, பாரதநாட்டின் வரலாறு பல்வேறு தேசீய இனங்களின் தனித்த பல வரலாறுகளின்