பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

முத்தமிழ் மதுரை



வளம் பெருக வேண்டும்

தமிழுக்கு அடுத்தபடியாக நம்மை வாழ்விப்பது தமிழ் நாட்டின் நீர்வளம் ஆகும். நீர்வளம் பெருக்கமாக இல்லாத போது உணவுத் தட்டுப்பாடுதான் எங்கும் நிலவும். உணவுத் தட்டுப்பாடு நேர்ந்தால் உயிர்களின் வாழ்வு சிதைந்துபோகும். வளத்தால் சிறப்புற்றிருப்பதுதான் வளரும் புகழினையும் ஒரு நாட்டிற்குக் கொண்டுதரும். இதனை உணர்த்தவே, ‘வையை உண்டாகும் வரையும் மதுரையும் புகழுடன் விளங்கும்’ என்றனர்.

ஈதலும் இறையடி தொழலும்

மூன்றாவது செய்யுள் இரண்டு உண்மைகளை உணர்த்துவது. ஒன்று, ஈதலைச் செய்யவேண்டும் என்பது. மற்றொன்று, இறையடியினைத் தொழவேண்டும் என்பது. இவற்றையும் நாம் மனத்திற் கொள்ளல் வேண்டும்.

வாழ்க்கையிலே சிறப்படைய வேண்டுமானால், தமிழ் மொழியின் வளத்தினாலே நாம் சிறப்புற்றிருத்தல் வேண்டும்; நாட்டின் செழுமையிலேயும் நாம் சிறந்திருக்க வேண்டும். பிறருக்குச் செல்வத்தைக் கொடுத்து உதவும் கொடைக்குணமும் நம்மிடையே நிலைபெறவேண்டும். இவற்றுடன், இறைவனைப் பணிந்து வேண்டும் பண்பும் நம்மிடையே நிலவ வேண்டும். இவற்றிலே சிறப்புற்றிருந்தது அந்நாளைய மதுரைப் பேரூர். அதனாலேயே, அதன் புகழும் நிலைபெறுவதாயிற்று.

அரசியலிற் செப்பம்

இந்த உயர்வுகளுடனே, அரசனின் ஆணை ஒரு நாட்டிலே நிலைபெறுதலும், அந்நாட்டினரின் நல்வாழ்விற்கு முதன்மையானதாகும். இதனைக் குறிக்கும் மற்றொரு பரிபாடற் செய்யுளையும் நாம் காணலாம்.

“கார்த்திகைப் பெண்கள் என்ற சிறப்பினை உடையவர் அறுவர்கள். முருகப் பெருமானின் தாய்மார் என்ற சிறப்பும் அவர்கட்கு உளதாகும். அவர்களுடைய காதுகளிலே பொன்னாலான மகர குண்டலங்கள் விளங்கும். அவை என்றும் சிறப்புடன் விளங்குவனவாகும். அவர்கள் கற்புநிலையிற் சிறந்தவர்களும் ஆவர். அதனால், அவர்கள் காதுகளில் விளங்கும் பொன்னாலான அம்மகர குண்டலங்களும் நாளுக்குநாள் பொலிவு பெற்றுக்கொண்டே போகும்.