பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலியூர்க் கேசிகன்

39


முகத்தினை உடையவுமாகப் பற்பல ஓடங்கள் வையைப் பெருந்துறையினிடத்தே விளங்கின. அவற்றுள் ஒன்றிலேறி அவர்கள் மதுரையை அடையவில்லை. கவுந்தி அம்மையுடன், மரத்தாலான ஒரு புணையிலே ஏறிச்சென்று, இனிய மலர் நிறைந்த நறுமணம் விளங்கும் சோலை ஒன்றின் தென்கரையினை அவர்கள் அடைந்தனர்.

நடுங்கிய மலர்கள்

அழித்தற்கு அரியதான காவற்காடு சூழ்ந்திருக்கும் மதுரையின் அகழி தோன்றியது. அதனைச் சுற்றியபடியே அவர்கள், நகரை வலம்வந்தனர். ‘தேவர்கள் வீற்றிருக்கும் மதுரை நகரம் ஆதலால், வலம் கொள்ளுவதற்கு அது பெரிதும் தகுதி உடையதாகும்’ என்று அவர்கள் கருதினார்கள்.

அகழியில் குவளைமலர்களும், ஆம்பல் மலர்களும், தாமரை மலர்களும் நிறைந்திருந்தன. பண் இசைக்கும் தன்மையுடைய வண்டினம், அப்பூக்கள்பால் விருப்புற்று ஒலிசெய்து ஏங்கியவாறு, அவற்றை அடைதலை மேற்கொண்டு கால் வைத்தன. அம் மலர்களின் காம்புகள் அப்போது நடுங்கின. அந் நடுக்கம், கோவலனும் கண்ணகியும் பின்னர் அடையப் போகும் துயரினை முன்னரே அறிந்து, அம் மலர்களும் வருந்து வதைப் போன்றிருந்தன.

கை காட்டும் கொடிகள்

பெரிய கேட்டையின்மீது, போரைக் குறிப்பிட்டு எடுத்தள்ள நெடிதான கயற்கொடி உயரமாகப் பறந்து கொண்டிருந்தது. அது, ‘நீவிர் மதுரைக்கு வாராதீர்’ என்று, அவர்களின் வரவைத் தடையிட்டு மறித்துக் கைகாட்டுவது போல அசைந்துகொண்டு இருந்தது.

புறஞ்சிறை மூதூர்

கொடியினைக் கண்டபின்னர் அவர்கள் புறஞ்சிறை மூதூரைச் சார்கின்றனர். பறவையினம் நிரை கொண்டிருக்கும் வயல்களையும் சோலைகளையும் கொண்டதாக, வெள்ளம் போன்ற நீர்ப்பெருக்கினைக்கொண்ட பண்ணையும், பரந்த நீர்கொண்ட ஏரியும், குலைகுலையாகக் காய்களையுடைய தென்னை வாழை கழுகு முதலியவையும், மூங்கில்கள் செறிவுற்றுப் பந்தரிட்டதுபோல விளங்கும் இடமும் கொண்ட இருப்பிடம் அது. அறம் புரிகின்ற மாந்தர்களை அல்லாமற், பிறர்