பக்கம்:முத்தமிழ் மதுரை.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

முத்தமிழ் மதுரை


பலநூறாக அடுக்கிக்கிடக்கும் அறுவை வீதியைக் கண்டு, கோவலன் அதன்பின் மகிழ்கின்றான்.

கூல வீதி

நிறைகோலான துலாத்தினையுடைவர், பறையென்னும் அளவு கருவியினர், மரக்கால் என்னும் அளவு கருவியினர் ஆகிய தரகுசெய்பவர் எங்கணும் திரிந்து கொண்டிருக்க விளங்கிய, மிளகுக்கு உரிய காலம் அல்லாத போதும் கருமையான மிளகு மூட்டைகளுடனே தானியங்களும் குவிந்துக் கிடக்கும், கூலவீதியினைக் கண்டும் அவன் வியக்கின்றான்.

நால்வேறு வீதிகள்

அரசர், வாணிகர், அந்தணர், வேளாளர் என்ற நால்வகைக் குடியினரும் தனித்தனியாக வாழ்ந்த, நால்வகையான பல்வேறு தெருக்களையும், அதன்பின் அவன் காணுகின்றான்.

அந்தியும், சதுக்கமும், ஆவணவீதியும், மன்றமும், கவலையும், மறுகும் ஆகிய அனைத்தும் அதன்பின்னர் அவன் சுற்றித் திரிகின்றான். திரிந்த பின்பு, உச்சிவெயிலும் நுழையாதபடி நெருக்கமான பெரிய வீடுகளையுடையதாகப் பசுமையான கயற்கொடிப் பந்தரின் நிழலின் கீழாக, பாண்டியன் காத்துவரும் பேரூரைக்கண்டு மகிழ்வு எய்திய அக்கோவலன், நகரைக் கடந்து, மீண்டும் புறஞ்சிறை மூதூர்க்குத் திரும்பி வருகின்றான்.

அவன் கண்டவை

நிலம் வளங்கொழித்துத் தருகின்ற செல்வத்தின் செழுமையுடனே, மக்கட்கு வாய்த்த நிழல் போலப் பேணிக் காக்கும் கடமையை மேற்கொண்டு ஆட்சிச் சக்கரத்தினை நிகழ்த்தி வருபவர் பாண்டியர்கள். அவர்களுடைய செங்கோலின் செம்மையினையும் கோவலன் மதுரையிற் கண்டான். அவர்களுடைய குடைநிழலின் தண்மையினையும் அவன் அறிந்தான். அவர்களது வேலின் வெற்றிச் சிறப்பையும் பார்த்தான். இவை எல்லாம் விளங்கிய தன்மையுடனே, நகரைவிட்டு என்றும் அகன்று அறியாத பண்பினாலே மேம்பட்ட குடிகளையுமுடைய மதுரை மூதூரைக்கண்டு, அவன் பெரிதும் வியந்தான்.

இவ்வாறு, கோவலன் மதுரையைக் கண்டதனைச் சிலம்பு நயமுடன் கூறுகிறது.