பக்கம்:முத்தம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

னாள். எனினும் அமைதியாக இருக்க இயலவில்லை. தெருவில் காலடி ஓசை கேட்டால் அவன் தானா என்று பார்க்க விரைவாள். ஏமாற்றம்'தான் காத்திருக்கும்.

அவளைப் பலமுறை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிய பிறகு, ரகுராமன் வந்து சேர்ந்தான். அவளது ஆனந்தத்துக்கு அளவில்லை. அவள் உளமகிழ்வு முகத்தில் நன்கு பூத்து மிளிர்ந்தது.

"வாருங்கள். நீங்கள் எங்கே வராமலே இருந்து விடப் போகிறீர்களோ என்று பயந்தேன்" என அன்பாகச் சொன்னாள். "உள்ளே வாருங்கள். இப்படி வந்து உட்காருங்கள்".

ரகுராமன் கண்கள் வீட்டை ஆராய்ந்தன. பெரிய வீடு. வசதிகள் நிறைந்தது தான். செல்வத்தின் பொன் வெயில் சுவருக்குச் சுவர், மூலைக்குமூலை பிரகாசமாகப் பட்டுத் தெறித்து, வீட்டையே சிறப்பாக்கிக் கொண்டிருந்தது. கலையழகும் ரசனைத் திறமும் அணிசெய்தன. ஆனால் அப்போது அங்கு அவளைத் தவிர வேறு யாரும் இருந்ததாகத் தெரியவில்லை.

அவன் கவனிப்பதைக் களிப்புடன் பின்பற்றிக் கவனித்து வந்த பத்மா முந்திக்கொண்டாள்." என்ன யோசிக்கிறீர்கள்? இங்கே வேறுயாரையுமே காண வில்லை என்றா? ஒருத்தருமில்லை தான். தாத்தா தான் உண்டு. எங்க அப்பா அம்மா இல்லை, அவர்கள் எல்லாரும் போயி ரொம்ப நாளாச்சு! தாத்தாதான் என்னை வளர்த்தது. அவர் கிராமத்துக்குப் போயிருக்கிறார், நிலங்களை கவனித்து வர வருவதற்கு ஒரு வாரமாவது ஆகும்" என்று விளக்கமாகக் கூறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/29&oldid=1496635" இலிருந்து மீள்விக்கப்பட்டது