பக்கம்:முத்தம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

7

ரகுராமன், மறுவாரம் வரட்டும் என்று காத்திருக்க வில்லை. இரண்டு தினங்களுக்குப் பின்னர் திரும்பி வந்தான். அவளுக்கு அவன் வருகை கசக்கவில்லை.

அன்று அவன் மாலைநேரத்தில் வந்தான். ரொம்பநேரம் வரை பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரது எண்ணங்களும் ஏறக்குறைய ஒரே தடத்தில் ஜோடியாகச் சென்றன. இருவருடைய மனப்பண்பும் ஒத்திருந்தது.

அவர்களுடைய பேச்சில் கலை, இலக்கியம், சமூகப் பிரச்னைகள் எல்லாம் அடிபட்டன. முக்கியமாக காதல் விவகாரங்களும், அவற்றில் ஈடுபட்டவர்களின் குறுகியநோக்கமும், களங்கமிலா மனதின் புனிதக் காதலும் இடம் பெற்றன. இருவருக்கும் பரஸ்பரம் கருத்து பரிமாறிக் கொள்வதும், சும்மா பேசிக் கொண்டிருப்பதும் இனிமைமிகுந்த அனுபவமாகத் தோன்றியது. லட்சியமான புனிதக்காதல் அளிக்கும் சுகானுபவம் இதுதான் என எண்ணினாள் பத்மா.

ரகுராமன் மூன்று நான்கு தினங்களுக்கொரு முறை அவள் வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அவனை அவசியம் வந்துபோகவேண்டும் என்று வற்புறுத்தினாள் பத்மா தன் தோழிகளின் கர்வத்தை அடக்க சந்தர்ப்பம் சுலபமாக, தானாகவே வந்து வாய்த்து விட்டது என நம்பினாள்.

பத்மாவின் தாத்தாவும் வந்து சேர்ந்தார், அவர் வந்தவுடனேயே அவள் அதிக உற்சாகத்துடன் தனது லட்சிய நண்பன் ரகுராமனைப் பற்றி விரிவாகச் சொன்னாள். மறுநாள் அவன் வந்ததும் அவனை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/35&oldid=1496642" இலிருந்து மீள்விக்கப்பட்டது