பக்கம்:முத்துப்பட்டன் கதை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


எதிர்க்கும் சமயத்தில் மலையாளப் பகுதியிலுள்ள தனித்தனிச் சிற்றரசுகள் திருவிதாங்கூரோடு இணைந்துவிட்டன. குற்றாலக் குறவஞ்சி இந்நாட்டை ஆரிய நாடு என்றழைக்கிறது என்று முன்னர்க் குறிப்பிட்டேன். குறவஞ்சியாசிரியர், குறவஞ்சி பாடியதற்காக, மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கரிடம், நிலம் மானியமாகப் பெற்றள்ளார் அப்பொறுப்புப் பட்டயத்தில் “சாலிவாகன சகாப்தம் 1640க்கு சொல்லாநின்ற கொல்லம் 891ம் வருஷம் தைமாதம் 11ந் தேதி ராஜமானிய ராஜஶ்ரீ முத்துவிஜய செங்க சொக்கநாத நாயக்கரவர்களோம்; திருக்குத்தாலம் ராஜப்பன் கவிராயருக்குப் பொறுப்புப் பட்டயம் எழுதிக் கொடுத்தபடி” என்ற சொற்றொடர் காணப்படுகிறது. ஆகவே பட்டயத்தின் காலம் 1718-கி.பி. என்று தெரிகிறது. கதையில் வரும் தலைவியர் இருவரும் வாலப்பகடையின் மக்கள். கடைகள் தெலுங்கு மொழி பேசும் சக்கிலியர். சக்கிலியர் பெரும் அளவுக்குத் தமிழ் நாட்டுக்கு வந்த காலம் எது? கிருஷ்ண தேவராயன் தஞ்சை மீதும், மதுரை மீதும் படையெடுக்கத் தனது தளவாய்களை அனுப்பினான். அவர்கள் தஞ்சையையும், மதுரையையும் கைப்பற்றினார்கள். கிருஷ்ண தேவராயனது காலத்திலேயே விஜய நகர ஆட்சி சீர்குலைந்தது மதுரைத்தளவாய் விசுவநாதநாயக்கன் சுயாதிகாரம் பெற்ற மன்னனானான். அவனுடைய சேனைகளோடு தமிழ்நாடு வந்தவர்களே சக்கிலியர்கள். அவர்கள் நாயக்கர் சேனைகள் தங்கியிருந்த இடங்களில் செருப்புத் தைத்துக் கொடுத்து வந்தார்கள். மூடநம்பிக்கையுள்ள நாயக்க மன்னர்கள், கோயில் கட்டும்பொழுதும், அணைகள், பாலங்கள் கட்டும் பொழுதும் நரபலி கொடுப்பதுண்டு. அதற்காக இழிந்தவரெனக் கருதப்பட்ட சக்கிலியர்களைப் பிடித்துச் சிறையிலடைத்துப் பலமுறை பலி கொடுத்தார்கள். உயிருக்குப் பயந்து அவர்கள் ஒரிடத்தில் தங்காமல் சிதறினார்ககள். அவ்வாறு சிதறியவர்கள் திருநெல்வேலி மாவட்டம் என்று இன்றழைக்கப்படும் பகுதியில் பல சிற்றூர்களில் குடியேறினார்கள். குடியேறியவர்கள் தங்கள் பரம்பரைத் தொழிலைச் செய்து பிழைத்தார்கள். இவ்வரலாற்றைக் கவனிக்குமிடத்து மதுரையில் திருமலை நாயக்கன் கட்டிடப்பணிகள் நடத்திய காலத்திற்கு முன்னர் சக்கிலியர் தென்தமிழ் நாட்டில் பரவினார்கள் என்று கருதலாம்.