பக்கம்:முத்துப்பாடல்கள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.







36. உடற் பயிற்சி


வீமனைப் போல்வலு வேண்டும்-நல்ல
வீரமும் தீரமும் வேண்டும்-ரகு
ராமனைப்போல் குணம் வேண்டும்-அந்த
ராவணன் ஆண்மையும் வேண்டும். 1

சேவல் செருக்கினைக் காணீர்-அதன்
செல்வ நடைகண்டு நாணீர்-என்றும்
ஆவ லுடனுழைப் பீரேல்-மிக்க
ஆரோக்கி யம்பெறு வீரே. 2

கூனற் குரங்குகள் போல-உடல்
குன்றி யிருந்திடல் ஆமோ?-அவ
மானமி தென்ன விடுப்பீர்-நிதம்
மார்பு நிமிர்ந்து நடப்பீர். 3

கட்டையும் வெட்டுதல் வேண்டும்-அதைக்
கட்டிச் சுமந்திடல் வேண்டும்-சிறு
பெட்டி எடுத்திடக் கெஞ்சும்-ஒரு
பேதையைக் கண்டுல கஞ்சும். 4

பொய்ம்மை புனைந்துரை யாடீர்-இகழ்
பூனைக் குணந்தனைத் தேடீர்-உயர்
மெய்ம்மை யினுக்குண்டு மேன்மை-வேறு
மேதினி யில்இலை ஆண்மை. 5


43