பக்கம்:முந்நீர் விழா.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பசிப்பிணி மருத்துவன்
1

அரசர்களைப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். புலவர் பாடும் புகழை உடையவர்களுக்கு, இம்மையிலும் மறுமையிலும் இன்பம் உண்டென்று அரசர்கள் எண்ணினார்கள். ஆனால், அரசன் தன் நாட்டில் வாழும் குடி மகன் ஒருவனைப் பாடுவது என்றால், அந்த நல்லோனுக்கு அளவிறந்த சிறப்பு இருக்கவேண்டும். குறுநில மன்னனுக இருந்தால் அவ்வளவு வியப்படைய வேண்டியதில்லை. முடியுடைய மன்னன் ஒருவன் பாடுவ தானால், அந்தப் பாட்டைப் பெற்றவன் எவ்வளவு பெருமையை உடையவனாக இருக்கவேண்டும்!

தமிழ் நாட்டில் முடியுடை மன்னர்கள் மூவரே. சேர, சோழ, பாண்டியர்களாகிய அம்மூவர்களும், படைப்புக் காலந் தொட்டு வருகிறவர்கள் என்று புலவர்கள் கருதினார்கள். பல மன்னர்களை ஆளும் சக்கரவர்த்திகள் அவர்கள். முடி புனையும் உரிமை, அந்த மூன்று குலத் தினருக்கு மாத்திரமே இருந்து வந்தது. -

காவிரியால் வளம்பெறும் சோழ நாட்டை ஆண்ட சோழர்களில் பலர் தமிழ்ப் புலமை உடையவர்கள். பாடல்களின் சுவையைப் பொதுமக்கள் நுகரும் முறை. வேறு; புலமையுடையோர் நுகரும் முறை வேறு. புலமை யுடைய புலவர்கள் தாம் கவிஞர்களாக இருப்பதனால் சிறந்த கவிதையை நன்கு சுவைத்தார்கள். அவர்களிடம், பரிசு பெறுவதைச் சிறப்பாக எண்ணினர் புலவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/22&oldid=1214728" இலிருந்து மீள்விக்கப்பட்டது