பக்கம்:முந்நீர் விழா.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

முந்நீர் விழா

 இருந்த கிணறுகள் யாவும் வற்றிவிட்டன. பக்கத்தில் இருந்த ஏரிகள் வற்றின. இந்த நிலையில் மக்களும் விலங்குகளும் நீர்வேட்கையால் துன்புறும்படி ஆகிவிட்டது. மாடுகள் இறந்தன. ஆடுகள் அழிந்தன. மக்கள் கூட்டம் கூட்டமாக ஊரை விட்டுப் புறப்பட்டனர். எங்கே பார்த்தாலும் மயானம் போன்ற காட்சி. பாலைவனமாகி விட்டது அந்தப் பகுதி முழுவதும்.

அப்போது மக்களின் துன்பத்தைக் கண்ட செழிய தரையன், அதனைத் தீர்க்க வழி என்ன வென்று ஆராய்ந்தான். மழை பெய்தாலன்றி நீர்வளம் உண்டாகாது. மழை நாம் விரும்பியபோது பெய்யாதே! கீழ் நீரைக் கிணற்றின் வழியே இறைத்துப் பயன் படுத்தலாம். கிணறுகள் யாவும் வற்றிக் கிடந்தன. ஊரை விட்டுச் செல்லும் மக்களைத் தடுத்து நிறுத்தவும் அவர்கள் தாகத்தைத் தீர்க்கவும் ஒரு வழி அவனுக்குத் தோன்றியது. காசைக் காசென்று பார்த்தால் ஒருவருக்கும் பயன் இல்லை என்று தேர்ந்தான். நான்கு இடங்களில் பெரிய கிணறுகளை நீர் சுரக்குமளவும் தோண்டும் முயற்சியை மேற்கொண்டான். பாதாள உலகம் வரையில் வெட்ட வேண்டியிருந்தாலும் விடுவதில்லை என்று துணிந்தான். பாறையை மருந்து வைத்து உடைத்து, நிலத்தைத் தோண்டத் திட்டம் இட்டான். இந்தத் தொழிலில் வல்லவர்களை அழைத்து வேலை செய்யச் செய்தான். மற்றவர்களுக்கும் மண்ணை எடுத்துப் போடுவது, கல் தச்சர்களுக்கு வேண்டிய ஏவலைச் செய்வது முதலிய வேலைகளை அளித்தான்.

சோழநாட்டிலிருந்து வண்டி வண்டியாக நெல்லை வருவித்தான். கொங்கு நாட்டில் ஒரு சிறிய பகுதியில் காவிரியாறு ஓடுகிறது. அப்போதைக்கு நீர் வேண்டும் அல்லவா? அதற்காகக் கொங்கு நாட்டு மோகனூரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/69&oldid=1207558" இலிருந்து மீள்விக்கப்பட்டது