பக்கம்:முந்நீர் விழா.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

முந்நீர் விழா

 இயற்ற வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. அவரிடம் சொல்லாமல் ஒரு கலம்பகம் பாடினான். அவருக்கு அந்தச் செய்தி தெரிந்தபோது, "பிறரால் பாடல் பெறும் தகுதி உள்ள நீங்கள் என்னைப் பாடலாமா?” என்று தம் பணிவைக் காட்டிக்கொண்டார். நூல் சிறப்பாக அரங்கேற்றப்பெற்றது.

ஒரு நாள் பாண்டியன் தனக்கு வேண்டிய புலவர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தான். கலம்பகம் பாடியது கேட்டு அறம் வளர்த்த முதலியார் சொன்னதை அப்புலவரிடம் சொன்னான். அந்தப் புலவர் முதலியாரின் பணிவைப் பாராட்டவில்லை. 'பார்த்தீர்களா? நான் அப்போதே நினைத்தேன்' என்றார்.

"என்ன நினைத்தீர்கள்?’ என்று பாண்டியன் கேட்டான்.

"அவர் வேளாளர். நீங்கள் முடி மன்னர்களாகிய பாண்டிய மரபில் உதித்தவர்கள். அவர் உங்கள் குடி மக்களில் ஒருவராக இருக்கும் நிலையினர்.அப்படி இருக்க நீங்கள் சாமானியப் புலவனைப்போல உங்கள் பெருமையைக் குறைத்துக்கொண்டு அவரைப் பாடலாமா? அது முறையன்றுதான்” என்றார் புலவர்.

அது கேட்ட பாண்டியன் புலவருடைய அறியாமைக்கு இரங்கினான்.

"சோழ அரசர்கள் முடிமன்னர்கள் அல்லவா?”

"ஆம்."

"கிள்ளி வளவன் என்ற சோழனைப்பற்றிக் கேள்வியுற்றதுண்டா?" -

"புறநானூற்றில் அவனைப்பற்றிய செய்திகள் வருகின்றன."

"அவன் ஒரு வேளாளனைப் பாடியிருக்கிற பாடலைப் பார்த்தது உண்டோ? அதுவும் புறநானூற்றில்தான் இருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முந்நீர்_விழா.pdf/93&oldid=1207763" இலிருந்து மீள்விக்கப்பட்டது