பக்கம்:முருகன் காட்சி.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நக்கீரர் வரலாறு

_ _____ _

_

திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் நக்கீரனார் என்னும் நல்லிசைப் புலமைச் சான்றோர் ஆவர். இவர் நக்கீரர் எனவும் நக்கீரனார் எனவும் பல பெயர்களால் அழைக்கப் பெறுகின்றார். இவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று வழங்கப்படுகின்றமையால் இவர் மதுரையில் பிறந்தவரென்பதும், மதுரை மாநகரில் அக் காலத்தே சீர்பெற்றுத் திகழ்ந்திருந்த ஒர் கணக்காயனார் - ஆசிரியர் மதுரைக் கணக்காயனார் என்பவர்தம் மகனாரே இந்நக்கீரர் என்பதும் அறியப் பெறும். கீரர் என்பது இவர்தம் இயற்பெயர் ஆகும். ‘ந’ என்பது சிறப்பினைக் குறிப்பதோர் இடைச்சொல். எனவே இவர் இயற்பெயரின் முதற்கண் சிறப்புணர்த்தும் இடைச்சொல்லும், இறுதியில் ஆர் என்னும் சிறப்பு விகுதியும் பெற்று நக்கீரனார் என்று அழைக்கப் பெற்றார். குலநினையல் நம்பி என்னும் சிந்தாமணிச் செய்யுளுரை யில், நப்பின்னை என்பதனை விளக்குழி பின்னை, அவள் பெயர்: ந.சிறப்புப் பொருளுணர்த்துவதோரிடைச் சொல்; நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற் போல’ என நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. இவ்வாறு கூறுவது கொண்டு பண்டைக் காலத்தே கல்வி கேள்வி களானே நிறைவும் செறிவும் பொருந்திய நல்லிசைப் புலமை வாய்ந்த சான்றோர்கள் தங்கள் பெயர்க்கு முன் நகர இடைச்சொல் பெற்று வழங்கப் பெற்றனர் என்பது தாமே போதரும். வில்லுக்குச் சேரன்; சொல்லுக்குக் கீரன்’ என்பது பழமொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/21&oldid=585901" இலிருந்து மீள்விக்கப்பட்டது