பக்கம்:முருகன் முறையீடு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மன்னனாய் வாழ்வோ மென்றும் மதிமிகப் படைத்தோ மென்றும்
பன்னல முடையோ மென்றும் பாரினிற் பெரிய மென்றும்
தன்னலங் கொண்டு கர்வம் தலைப்பிடித் தாடு மென்றன்
இன்னலைத் தீர்ப்பாய் செந்தில் இனிதுறை முருக வேளே.

பருந்தென் அலைவேன் பாரில் பழிச்சுமை சுமந்தே யாருந்
துரும்பென மதிப்பேன் வீணில் தூற்றுவேன் நின்னைக் காண
விரும்புநின் னடியார் தம்மை வெறுத்துரை செய்வேன் என்னின்
திருந்துமோர் மார்க்கங் கூறாய் திருகரப் புரம்வாழ் தேவே.

சிவனடி யார்க ளென்று செப்புவர் செப்பு முன்னர்
புவனமே யுண்ட மாயோன் புண்ணிய புருஷர் என்பர்
குவலய மீதில் வீண்பொய்க் குற்றமே செய்து நாளும்
அவமதாய்க் கழிப்பர் அந்தோ! அருள் வழி யறியார் என்னே,

கடுஞ்சினங் கொள்வேன் மூர்க்கக் கயவரில் கடைய னாவேன்
அடுமதக் களிறே யென்ன அலை குவேன் அறிஞர் தம் முன்
ஒடுங்கிநின் றவர்கள் பேசும் ஒண்பொருள் ஒரேன் யாரும்
நடுங்கிடத் தீச்சொல் கூறும் நாயினேன் உய்வ தென்றோ.

பொய்ம்மையே புகல்வேன் சாந்தப் பொறைகொளேன் புகழ்பெற் றோங்கும்
மெய்ம்மையே பயிலேன் மேலோர் மேவுறு நெறியுந் தேடேன்
வெம்மையாங் கொடிய கோபம் விரைவினில் கொள்வேன் வீணன்
எம்மையா தரிக்கக் கோவே இறைஞ்சினே னேழை யேனே.

மறைவழி நிற்கும் நீதி மறையவர் மருங்கே செல்லேன்
பிறரெனைப் புகழக் கேட்டுப் பேதைமை யுற்று நிற்பேன்
குறையெடுத் துரைத்தால் வெய்ய கொடுஞ்சினங் கொள்வேன் வானோர்
இறைவனே நெறியொன் றோதி ஏழையேற் கருளு வாயே.

உண்ணவு முணவு மற்றும் உடுக்கவோ ருடையு மின்றி
எண்ணிலா வின்னல் சூழ ஏங்கிவாழ் வறிஞர் தம்மை
கண்ணிலும் நோக்கார் தங்கள் கருமமே பெரிதாக் கொண்டு
மண்ணிடை வாழும் பொல்லா மக்களைப் படைத்தீ ரேனோ.

செந்தமி ழுண்மை கண்டு தினந்தொறு மாய்ந்து நன்கு
முந்திடும் ஊக்கங் கொண்டு முதுமையே தழுவி ஆண்மை
தந்திடும் அமிழ்தின் மிக்க தண்டமிழ்தன்னை யோ தார்
அந்தகற் போல்வார் அந்தோ அவனியில் அறிவி லாரே.