பக்கம்:முருகன் முறையீடு.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

பூதல வாழ்வில் உண்மைப் பொருளறி கில்லேன் அந்தோ
வேதனை என்றே பண்டை விதியினை நொந்தேன் பாவி
தீதறு மெய்மை நாடேன் தீங்குகள் பலவுஞ் செய்தேன்
நாதனே இனியிந் நாயேன் நல்வழி அடைவ தென்றோ.

ஊக்கமும் உணர்வு மில்லா வுடம்பினை யோம்பி நாளுந்
துாக்கமே குடியாக் கொண்டு சோம்பலே துணையாய் நின்றேன்
நீக்கிட வழியுந் தேடேன் நினைமறந் தேனை மாசு
போக்கிநின் னருள்தந் தாள்வாய் புண்ணியா புலவர் கோனே.

சாதியில் உயர்ந்தோ மென்பர் சாத்திரங் கற்றோ மென்பர்
நீதியில் மிகுந்தோ மென்பர் நின்னருள் பெற்று வேதம்
ஒதியே வாழ்வோ மென்பர் உரைப்பதே வாய்மை யென்பர்
வேதியர் யாமே யென்பர் வீணர்கள் செயலோ வேதே.
 
வாதுகள் பலவுஞ் செய்தேன் வகைதெரிந் துலகில் உய்யும்
ஏதுகள் அறிந்தே னில்லை இழிகுலப் பேதை யானேன்
சூதுகள் செய்தேன் சான்றோர் சொல்லரும் வாய்மை கேளா
தீதுறு மனத்தே னானேன் செய்வதொன் றறியேன் அண்ணால்

இச்சக வாழ்வி னற்ப இயல்பினை விழைந்து நின்றேன் அ
ச்சுக அறிவொன் றில்லா அற்பரிற் கடைய னானேன்
நச்செனத் தீச்சொல் கூறும் நவையுரை பயின்றேன் இன்றே
அச்சமில் வாழ்வு தாராய் அண்ணலே அமரர் கோவே.

அரும்பெரும் நூல்க ளாய்ந்த அறிஞர்கள் அரிதே நோய்க்கு
மருந்தெனப் பொய்மை நீக்கு மறைமொழி யுரைக்கில் ஆங்கே
பொருந்திய அன்பு கொள்ளாப் புன்மனப் பேதை யன்னார்
திருந்துமோர் மார்க்கங் கூறாய் திருகரப் புரம்வாழ் தேவே.

தானமும் தவமும் சாந்தத் தண்ணருள் பெற்று நாளும்
மானமுங் காத்து வீண்பொப் வஞ்சக மொழித்து மெய்மை
ஞானமும் பூண்டு பக்தன் நானெனக் கூறு கேனோ
வானவ ரேத்தும் பைம்பொன் வரையமர் முருக வேளே

ஆலைவாய்ச் சங்கே யெனன் அலறினேன் அழுதே னந்தோ
வேலைசூழ் அவனி மீது வேணநாள் கழித்து நின்றேன்
மேலைவாழ் வறிவொன் றில்லேன் மேவிநின் னருள்தந் தாள்வாய்
சோலைசூழ் தணிகை மேவுஞ் சுந்தரா வும்பர் கோவே.