பக்கம்:முருகன் முறையீடு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


நல்லறத்தின் தலைநின்று நானென்னுஞ்
செருக்கற்று நாளு முய்ந்து
எல்லையறு பேரின்ப மெய்திடுநாள்
என்றென்றோ இயம்பு வாயே.

கண்களெனுங் கொடும்பாசக் கயிறென்னும்
வலைவீசிக் கவரும் பொல்லாப்
பெண்களெனும் விலைமாதர்ப் பேய்களினால்
பிடிபட்டுப் பிறழா வண்ணம்
பண்களொடு தமிழ்க்கூட்டி நினைப்பாடும்
பேரின்பப் பதத்தந் தாள்வாய்
தண்புனல்சூழ் திருத்தணிகைத் தல மேவும்
தாயனைய தலைவா நீயே.

சித்த மிசை குடிகொண்ட செல்வனே
சேய்க்கு நின தருள்தந் தாயே
எத்தனைநா ளிருந்தாலும் இவ்வுலகில்
இன்புறும் வாழ் வெய்திப் பற்று
அத்தனையும் அறப்போக்கி அடியன்யான்
எனக்கூறி அஞ்சேன் யார்க்கும்
நித்த முனைப் பூசிப்பேன் நிலவுலகில்
நின்பணிசெய் நெறிகொள் வேனே.

பைங்கொடியா ரிருவரின்பம் பரிந்துவக்கும்
முருகோனே பணிந்து நின்பால்
பொங்கியெழு மாவலொடு போந்தேனுன்
பொன்னடியே பொருளாக் கொண்டு
தங்கிவளர் பேறோடு தழைத்தோங்கி
அடியனெனுந் தன்மை சார்ந்து
மங்குதலில் லறிவோடு மண்ணுலகில்
வாழவருள் மகிழ்செய் வாயே.

தன்மனையா ளகமுருகித் தனித்திருக்க
அயல்மனையைச் சார்ந்து செல்லும்
புன்மனத்துப் பேதையரைப் புவனமிதில்
ஏன்படைத்தீர் பொருள்பெற் றீயா
வன்மனத்து லோபியர்கள் மனம் நாண
வரையின்றி வறியார்க் கீந்து
நன்மனத்தே னெனப்புகலும் நலமுறுனன்
னெறியொன்று நவில்கு வீரே.