பக்கம்:முருகன் முறையீடு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

வாதுகள் செய் புன்மக்கள் வழியேகுந்
தியெண்ணம் மறந்தே னில்லை
ஏதுமிலா வந்தகனா பிறைஞ்சிநின
தருள்கானா தேங்கி னேனே.

 

வேறு

 

நற்செயலி லாதவுட விச்சையே கொண்டியான்
நன்மையொரு சிறிது மறியேன்
சற்சனர்க ளில்லாத சபைகளில் கூடியே
தயங்கிமிக மனது நொந்தேன்
கற்பனைகள் செய்துலகில் கதையுரைத் தவலமாய்க்
கயவரிலோர் கயவ னானேன்
சிற்பொருளாய் ஒங்கிடுநற் செல்வமே அடியவர்
சித்த மிசை குடிகொள் வோனே.

ஓயாத கவலையும் தீராத பிணிகளும்
ஒட்டாம லோட்டி யென்றும்
பேயாக வாழ்ந்துபொய் பிர்மையினில் சிக்கியே
பேதமுற் றுழன்று திரியா
சேயாக மாற்றியென் சிந்தை மகிழ் நல்வரம்
செல்வனே தருக வருவாய்
தாயான கெளரியாள் தனயனென்னுங் கந்தனே
தையலார் மகிழு வோனே

சித்தமோர் நிலையிலா தேங்குமே பாழ்.மனம்
சினங்கொண்டு சீறி விழுமே
மெத்தமே நொந்துடல் வாடுமே நின்பதம்
வழுத்தின்பம் தேடி வருமே
எத்தனை முறையுனை யேத்தினும் அடியனுக்
கிரங்காத தன்மை யேனோ
தத்துமா மயிலுடன் தலைவனே வந்தருள்
தணிகைவளர் தம்பி ரானே.

தீராத பிணிதீர்க்கும் தெய்வீக வருளோடு
சிந்தை மகிழ்ந் தென்று முன்பால்
வாராத குறைதீர்த்து வறியருறு துயர்போக்கும்
வண்மையுடன் அறிவும் பொய்மை
சேராத வாய்மையொடு சீர்மேவு நல்வாழ்வுஞ்
செல்வனுனை வேண்டி நின்றேன்
பாராத நயனங்கள் பார்த்தரிய சேவைபெற
பரிந்தென்முன் வருக வெந்தாய்.