பக்கம்:முருகன் முறையீடு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க கவிஞர் திருக்குறளார்

தித்திக்கத் தேன் தமிழில் நகைச்சுவையுடன் திருக்குறள் கருத்துக்களைக் கடந்த ஐம்பதாண்டு கட்கு மேலாகத் தமிழர்கள் வாழும் நாடுகளில் பரப்பிவரும் கலைமாமணி, திருக்குறளார் வி. முனிசாமி, பி.ஏ., பி.எல். அவர்கள் சிறந்த சொற்பொழிவாளர் என்பதை நாடறியும். பட்டப் படிப்பிற்குப் பயிலுங் காலத்திலே முதலில் கவிஞர் ஆகவே திருக்குறளார் முயன்றுள்ளார். அருளாளர் பாடிய “பாடற்கினிய வாக்களிக்கும்” எனும் பாடலை நாள்தோறும் பாடிவந்த பழக்கம் அவரை ஒரு பாடலாசிரியராகவே உருவாக்கியது. அவர் தம் முயற்சியின் பயனே ‘முருகன் முறையீடு’ என்னும் இம் முக்கனிச் சுவை பயன்தரும் நூல். 1935இல் வந்த நூலைத் தமிழக மக்களுக்காகத் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மறுபதிப்புச் செய்துள்ளது. மேனாள் கழக ஆட்சியாளர் தாமரைத்திரு வ. சுப்பையா பிள்ளை அவர்கட்கும் திருக்குறளாருக்கும் இருந்த பழம் பெருங்கேண்மையை நிலைப்படுத்தவே இச் சிறு வெளியீடு.

- கழகத்தார்