பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்தஸ்தானம்) திருப்புகழ் உரை 601 மன்மதனுக்கு ஒப்பானதும், (காமப்) போருக்கு உற்றதுமான இடையை உடையவர்கள், இளைஞர்களின் அரிய உயிர் தங்கிவாழ்கின்ற கொங்கையை உடையவர்கள், இனிமை வாய்ந்த பெரிய பேச்சுக்களைப் பேசும் குணத்தினர், தெருவில் (சருவி) கொஞ்சிக் குலவி யாரையும் வா என்று அழைப்பவர், பொருள் பெறுவதில் மிக்க ஆசை பரந்துள்ள நெஞ்சினர், எல்லாவித வஞ்சகமான மாயை வித்தைகளையும் கற்பவர், (இத்தகைய) வேசையர்களை நான் நெருங்காமல். தாமரைக்கு ஒப்பான உனது திருவடியைத் தியானித்து, முன்பு திருவண்ணாமலைப் பிரதேசத்தில் நான் ஒதின சந்தப்பாவாம் திருப்புகழை உள்ளங் குளிர்ந்த மகிழ்ச்சியுடனே (எப்போதும்) ஒதும்படியான பாக்கியத்தை எனக்கு நீ அருள்புரிவாயாக! (செல்லுதற்கு) அரிய (வள்ளிமலைக்) காட்டில் இருந்த குறத்தி தனது (தினைப்புனத்துப்) பரண்மீதில் சில நாளும், (மனத்துடன்) மனம் வைத்து ஆசையுடன், (அடவிதோறுமே) (சந்தனக்காடு, செண்பகக்காடு முதலிய) காடுகள் தோறுமே வாழ்ந்து உலவின, உழுவலன்புடைய பத்தினித்தேவியாகிய வள்ளியின் மணவாளனே! அசுரர்கள் இருப்பிடங்கள் எல்லாம் தூளாகிப் பொடியாக (அல்லது நூற்றுக்கணக்காகப் பொடிபட), (உழவர்) (அசுரப்) படைவீரர்கள் (பயந்து) கடலுள் ஒடி ஒளித்துக்கொள்ள, தேவர்களின் நாடு (பொன்னுலகம்) பொன்மழை மிகச் சொரிய நினைந்து உதவினவனே!