பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பெல்லாம் சரமாகி அரங்கேறும் நேரம். விட்டு விட்டு விண்மலர்கள் புறவிதழை அவிழ்த்து விளையாடி ஒளிமணத்தை விருந்துவைக்கும் நேரம். வான் வில்லின் வண்ணத்தை ஏழிசையாய்க் கோதை வடித்தெடுத்து மாடியிலே வழங்குகின்ற நேரம். மத்தாப்புப் பூக்களைப்போல் வண்ணவண்ணக் கருத்துக்கள் அவள் பாட்டில் தெறித்துவிழுந்தன; அப்பூக்களைப்போல் அவையும் சூடாக இருந்தன. இசையாசிரியனிடம் கற்ற உருப்படிகளைக் கிளிப்பிள்ளைபோல் அவள் பாடவில்லை. அவள் இதயத்தில் கருக்கொண்டு புல்லரிப்போடு புறப்பட்டுவந்த புதிய பூபாளங்களைப் பாடினாள். வீணையை வருடும்போதும், நீண்ட அதன் நரம்பு நாக்குகளைத் தடவும்போதும் உடல் சிலிர்க்கும் ஊற்றின்பம் அவள் மயிர்க்கால்களில் அரும்பியது. இசையில் தன்னைக் கரைத்து இசையே தானாக எழுந்து வந்தாள். கவிஞர் முருகுசுந்தரம் 228