பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டும் அனற்குழம்புக் கூவலைச் செவிமடுத்துச் சிட்டுப் பறந்துவந்தாள்; செய்ய தமிழ்க்கவிஞன் பொற்பதக்க மார்பில் புதுவைரம் போற்பதிந்தாள். சிற்ப ரதியைச் சேர்த்தணைத்து, முன்னால் இழந்த பெருந்தனத்தை எய்திய ஏழையைப்போல் பழந்தமிழ்ச் சங்கப் பாட்டுத் தொகையுடம்பை உச்சி முதலாய் உள்ளங்கால் ஈறாக இச்சை யுடன்தடவி இன்ப சுகங்கண்டான். கண்கள் எனுஞ்சிவந்த காளவாய் கொப்பளித்த வெந்நீர் அருவியை வேர்ப்பலா முத்தத்தால் கட்டி அணையிட்டான்; கார்குழல் காட்டுக்குள் எட்டி நுழைந்தே இளைப்பாறி வீற்றிருந்தான். ஆகம் பொருந்தி ஞானியர்போல் காதலர்கள் ஏக நிலையில்இருந்தார் தமையிழந்து! சுற்றி யிருந்த சோலைகளும் மாமரமும் நெற்றியில் பொட்டு நிலவணிந்த மாமலையும் விண்ணும் உடுக்களும் விரிந்து பரந்தவிந்த மண்ணும் விலங்கும் மறைந்து கரைந்துருகி ஆவி நிலையாகி அன்புப் பெருவெளியாய் மேவி யிருக்க இருவரையும் வெடுக்கென்று தாவிப் பறித்ததோர் கை! வெடிக்காத தென்னையிளம் பாளை போன்ற வீரவாள் மீதிலொரு கையும், துள்ளித் துடிக்கின்ற மீசைவாள் மீதோர் கையும் தொட்டவண்ணம் நின்றிருந்தான் சோழன்; கையை நொடித்தவுடன் அடுப்புக்கண் கொலைஞர் பாய்ந்தார். நுதல்வியர்த்த இளங்கவியைப் பருந்து பற்றி அடித்துக்கொண் டோடுவது போலச் சென்றார்; ஆணிமுத்தைப் பெட்டகத்துள் அடைத்து வைத்தார். கவிஞர் முருகுசுந்தரம் 250