பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டார வண்டுகளின் பாட்டுச் சாவி பட்டவுடன் திறக்கின்ற பூட்டுப் பூக்கள் கொண்டுவந்தாள் கோவேந்தன் கொழுந்து; பாட்டுக் கொவ்வொன்றாய் எடுத்தெடுத்து மாலை செய்தாள். பண்டைமுறைப் படிமுதலில் செய்யும் காப்புப் பாடலையும் தன்கணக்கில் பிழையாய்ச் சேர்த்தாள். தண்டைக்கால் சதிமிதிக்கக் குலுங்கி வந்து தமிழ்க்கவிஞன் நெடுமார்பில் மாலை யிட்டாள். தேனுறும் செம்பவள இதழாள் நின்ற திருக்கோலம் கண்டவுடன், கம்பன் பிள்ளை பாநூறு முடிந்ததென நினைத்தான்; பக்திப் பாட்டுக்கு விடைகொடுத்தான்; முன்பு செய்த நானூறு கோவைப்பா சதங்கை கட்டி நடக்கின்ற கலித்துறையில், காதல் தேனை வானூறும் அமுதமென வாய் திறந்து வந்திருந்தோர் அதிர்ச்சியுற வழங்க லானான். 'பார்கொண்ட மன்னவன் பாவையுன் மார்புப் பகைக்குடைந்து கார்கொண்ட நுங்கிளங் காய்மட லுற்றது; செவ்விளநீர் தார்கொண்ட ஆடவர் போட்டுடைத் தார்; தன் தலைகவிழ்ந்து சீர்கொண்ட தாமரை மெல்லரும் பும்வேர்த் திருந்ததுவே!" முருகுசுந்தரம் கவிதைகள் 253