பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் ல் 73 சேவடியை ஏத்துவார் (274) என்றும் சீவகசிந்தாமணி கூறுவது பிறசமயத்தாக்கத்தால் என்று கொள்வதில் தவறில்லை. மிகவும் பிற்பட்டுத் தோன்றிய நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவரும் பதவியலின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை அச்சுதன் அடிதொழுது அறைகுவன் சொல்லே என்று பாடுவதாலும் திருவடியைப் போற்றும் வழக்கம் ஜைனர்களிடமும் பிற்காலத்தில் வலுவாக இருந்தது என்பதை அறிய முடிகிறது. சங்ககாலம் தொடங்கிப் பதினைந்தாம் நூற் றாண்டுவரை சைவம், வைணவ, ஜைனம், பெளத்தம் என்ற நான்கு சமயங்களும் திருவடியைப் போற்றும் பழக்கத்தைக் கொண்டிருந்தன என்று அறிகிறோம். இந்த அடிப்படையில் நோக்கினால் ஏழு குறள்களில் திருவடி பற்றிப் பேசும் வள்ளுவரும் இப்பொது விதிக்கு விலக்கல்ல என்பது நன்கு விளங்கும். இதனை இவ்வளவு விரிவாகப் பேசுவதன் காரணம் ஒன்றுண்டு. சைவர்கள்தான் திருவடியை அதிகம் பேசியுள்ளனர். எனவே திருவடிபற்றி ஏழு குறள்களிற் பேசும் திருவள்ளுவரும் சைவ சமயத்தைச் சார்ந்தவர் என்று பேசுவது பொருத்தமுடையதாகத் தெரிய வில்லை. - எது எப்படியாயினும் இந்த நான்கு வகைச் சமயத்தாரும் திருவடிபற்றி இவ்வளவு அழுத்தமாகப் பேசவேண்டிய காரணம் என்ன? என்பதுபற்றி மேலும் ஆராய்வது நலம் என்று நினைக்கின்றேன்.