பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ 85 பற்றுக்கோடுகள் உள்ளன. இந்தப் பொறிகள் எந்த அளவிற்கு தத்தம் பற்றுக்கோடாகிய புலன்களில் ஈடுபட வேண்டும் என்பதை அறிவுறுத்துவது 'அறிவின் செயலாகும். இந்தப் பொறிகள், புலன்கள் மாட்டு அளவு மீறி ஈடுபட்டாலோ தவறான ஈடு பாட்டைக் கொண்டாலோ அதனைத் தடுத்து நிறுத்திச் செம்மையான வழியிற் செலுத்த வேண்டியது அறிவின் கடமையாகும். இதனையே தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (குறள் 422) என்று ஆசிரியரே கூறியுள்ளார். - இப்பொறிகளுக்கு ஒரு குறைபாடு உண்டு. உதாரணமாக, பழக்கவசத்தாலோ அறியாமை யாலோ தவறான சேர்க்கை காரணமாகவோ தாம் காணவேண்டியனவற்றை விட்டுவிட்டுக் காணத் தகாதவற்றைப் பார்க்கும் தன்மை கண்ணுக்கு ஏற்பட்டுவிடுகிறது. கனியிருப்பக் காய் கவர்கின்ற தன்மையென்று இதனைச் சொல்லலாம். மனிதன் வளரவளரக் கல்வி கேள்விகளில் மேம்பட மேம்பட அறிவு விசாலம் அடைய அடைய இப்பொறிகளின் பணி வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. உதாரணமாக ஒன்றைக் காணலாம். அழகான பொருளொன்றை முதன்முதலாகக் கண் பார்க்கின்றது. அந்த அழகில் ஈடுபட்டு அதனையே பார்த்துக் கொண்டு இருக்கவேண்டும் என்ற அளவில் மனத்திடை ஒர் ஆவல் பிறக்கிறது. அழகு எங்கே யிருக்கிறது? கண்ட பொருளிலா? காணும் கண்ணிலா? அக்கண்வழி நின்று உள்ளத்திடைத் தோன்றுகின்ற உணர்விலா? எங்கேயுள்ளது அழகு என்ற ஆராய்ச்சியில் வளர்கின்ற அறிவு ஈடுபடுகிறது.