பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்றுறாச் சிந்தனைகள் இ. 121 கருமம் என்ற பொதுச்சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப மாறு படும் கடமைகள் அனைத்தையும் குறித்தாராயிற்று. எனவே தத்தமக்குரிய கடமைகளைச் செய்பவர்கள் ஆகிய இல்லறத்தார் அனைவரும் தவம் செய்வார் என்றே கொள்ளப்பட வேண்டும். உண்மையாகத் தம் நிலமைக்கேற்ற கடமைகள் யாவை? யார்யாருக்கு எவ்வாறு ஒப்புரவு செய்ய வேண்டும் என்று நினைத்து அவற்றைத் தமக்குரிய கருமம் என்று செய்பவர்கள், விருப்பு வெறுப்புக்களி லிருந்து நீங்கியவர்கள் ஆவார்கள். இந்தக் கடமை களை நிறைவேற்றினால் தமக்குப் புண்ணியம் கிடைக்கும், தேவருலகத்தில் ஒர் இடம் கிடைக்கும் என்பனபோன்ற ஆசைகளுக்கு உட்பட்டுக் கடமை களைச் செய்பவர்கள் அல்லர் இவர்கள். ஆசைக்குட் பட்டுச் செய்பவர்கள் அறத்தை விலைபேசுபவர்கள் ஆவார்கள். இத்தகையவர்களை அவஞ்செய்வார் ஆசையுட்பட்டு என்ற தொடரில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். வள்ளுவருக்கு மிக முற்பட்ட புறநானூற்றுக் காலத்திலேயே இக்கருத்துப் பேசப்படுதலை இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் (புறம்134) என்ற அடிகள் அறிவுறுத்தி நிற்கின்றன. இல்லறத்தில் வாழ்வோர்க்குரிய கடமைகள் இவை என்பதை உணர்ந்து விருப்பு வெறுப்பின்றி மறுமைக்கு வழிகோலும் வழி இது என்ற நினைவு கொள்ளாமல் தம் கருமத்தைச் செய்பவர்கள், தவஞ்செய்வார் என்றே வள்ளுவர் கருதுகிறார்.