பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இ. அ.ச. ஞானசம்பந்தன் ஆராயும் வயதோ கல்வித் தகுதியோ இந்த இளங் குழந்தையிடம் இருந்திருக்க முடியாது. இந்த விநாடி வரை ஒரு சாதாரண மனிதக் குழந்தையாக, சிவபாத விருதயர் பிள்ளையாகத்தான் பிள்ளையார் இருந்து வருகிறார். எனவே காரண-காரிய அடிப்படையில் இந்தச் சார்புபற்றிய நினைவு பிள்ளையாருக்கு வந்திருக்க நியாயமில்லை. ஆனால் இந்தக் குழந்தை அழுத அழுகை ஒரு மாபெரும் புரட்சியை இந்தத் தமிழகத்தில் செய்யப்போகிறது என்பதை நம்போன்ற வர்கள் அறியலாமே தவிர, அந்தக் குழந்தையோ அல்லது சுற்றியுள்ளவர்களோ அறிந்திருக்க நியாய மில்லை. இவற்றையெல்லாம் மனத்துட்கொண்ட சேக்கிழார், தம் மேலைச் சார்பை அறிந்தோ, தெரிந்தோ, அழுதார் என்ற கருத்தைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்தக் குழந்தையின் அழுகை மிகு சைவத் துறை தமிழகத்தில் செழிக்கப் போடப்பட்ட பிள்ளையார் சுழி என்பதைப் பின்னர் வந்த சேக்கிழார் அறிகின்றார். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் சார்பை அறிந்து, தெரிந்து அழுதார் என்று சொல்லாமல் உணர்ந்து என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் சேக்கிழார். - உணர்வு என்பது யாரிடத்தில் தோன்றுகிறதோ அவருக்குக்கூட அதன் அடிப்படை தெரியாது. அடி மனத்தின் ஆழத்தில் தோன்றும் இந்த உணர்வு பழைய பிறப்பு, இறைத்தொடர்பு என்பவற்றை நினைவூட்டி நிற்கின்றது. எனவேதான் சேக்கிழார் உணர்ந்தோ என்ற வினாச்சொல்லைச் சார்புக்கு ஏற்றுவதன் மூலம் இக்கருத்தை வெளியிடுகிறார்.