பக்கம்:முற்றுறாச் சிந்தனைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை முனைவர் தெ.ஞானசுந்தரம் சென்னை - 600 101 இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியைத் தம் பேச்சாலும் எழுத்தாலும் செங்கோல் செலுத்தி யாண்ட சிலருள் குறிப்பிடத்தக்கவர் பேராசிரியர் அ.ச.ஞா. அவர்கள் ஆவார்கள். அடேயப்பா! எத்தனை அழுத்தந் திருத்தமான கணிர் என்ற பேச்சு! அருவியின் வீழ்ச்சிபோலத் தங்கு தடையற்ற சொற்பெருக்கு! புதுப்புதுச் சிந்தனைகள்! அறிவியல் பார்வை! இவர்தான் முன்னை நாள் அகத்தியரோ என்னும் வியப்பில் பலரின் புருவங்கள் உயர்ந்தன. அவர் பேசாத பொருள் இல்லை. சங்க இலக்கியம் முதல் பாரதிதாசன்வரை அவர்தம் சொற்பொழிவுப் பொருள் விரிந்து சென்றது. அவர் பேசாத இலக்கிய சமய மேடைகள் இல்லை. பேச்சாளர் பலர் எழுத்தாளராக ஒளிவிடுவ தில்லை. அதற்கு விதிவிலக்குப் பேராசிரியர் அ.ச.ஞா. அவர்கள் எழுத்திலும் முத்திரை பதித்தவர்கள். நல்ல ஆங்கிலப்புலமையோடு திகழ்ந்தமையால் மேலை நாட்டுத் திறனாய்வாளர்களின் கோட்பாடுகளைத் தமிழ்ப்படுத்தித் தம்விரிந்த தமிழ்ப்புலமையால் அவற்றிற்குத் தக்க சான்றுகளைத் தமிழ் இலக்கியங் களிலிருந்து தேர்ந்து அவற்றைப் பொருத்திகாட்டித் திறனாய்வுத்துறைக்குக் கால்கோள் செய்தவர்கள்.